அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு குறித்த சுற்றறிக்கை : ஆதரவற்றோருக்கான ஓய்வூதிய பங்களிப்பாக 8% அறவிட தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 10, 2024

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு குறித்த சுற்றறிக்கை : ஆதரவற்றோருக்கான ஓய்வூதிய பங்களிப்பாக 8% அறவிட தீர்மானம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அரச சேவையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்று (10) வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அரச அதிகாரிகளின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ஜனவரி முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, அரசு ஊழியர் ஒருவருக்கு மாதாந்தம் வழங்கப்படும் 7,800 ரூபாய் வாழ்க்கைச் செலவு உதவித் தொகையுடன், 5,000 ரூபாய் சேர்த்து, 12,800 ரூபாயாக வழங்கப்பட வேண்டும்.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் நிலுவைத் தொகையை, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மாதாந்தம் 5,000 ரூபா செலுத்தப்பட வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய பங்களிப்பாக அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 8 வீதம் அறவிடப்படும் என மேற்படி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள், சாதாரண தினக்கூலி பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கும் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, ஓய்வு பெற்றவர்களுக்கான தற்போதைய வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு இந்த ஆண்டு ஏப்ரல் முதல் 2,500 ஆல் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஓய்வூதியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 3,525 ரூபாவிலிருந்து 6,025 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment