(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து மனிதப் படுகொலை செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடுகிறது. நாட்டில் சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்துக்கள் பொறுப்பற்றதாக உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்' தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வைத்தியர்கள், தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். வைத்தியசாலைகளில் மருந்து உட்பட மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நாளாந்தம் தீவிரமடைந்து செல்கிறது.
அரச வைத்தியசாலைகளில் மருந்து பொருட்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் தனியார் மருந்தகங்களை நாடுகிறார்கள். மருந்து தட்டுப்பாடு, மருந்துகளின் விலையேற்றம் ஆகிய காரணிகளால் பொதுமக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான பின்னணியில் தரமற்ற மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. தரமற்ற மருந்து பாவனையால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளார்கள். இந்த உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சு, தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை பொறுப்புக்கூற வேண்டும்.
பதிவு செய்யப்பட் மருந்து இறக்குமதியாளர்களுக்கு மருந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்காமல் புதிய இறக்குமதியாளருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இந்த தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரத்துடன் அரசாங்கத்துக்கு இணக்கமான ஒருவரின் தங்கையின் மகன் தொடர்புபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
தரமற்ற மருந்துகள் ஏதும் இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. அப்பாவி மக்களை கொலை செய்யும் செயற்பாடுகளுக்கு இணையான செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடுகிறது என்றார்.
No comments:
Post a Comment