வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை அமையுங்கள் - சார்ள்ஸ் நிர்மலநாதன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 5, 2023

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை அமையுங்கள் - சார்ள்ஸ் நிர்மலநாதன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வரும் குற்றவியல் வழக்குகளை தமிழ் நீதியரசர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்' தொடர்பான சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வரும் குற்றவியல் வழக்கு கோவைகள் தொடர்பில் தாமதங்கள் ஏற்படுகின்றன. இதற்கு வடக்கு மற்றும் கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வழக்குகள் நடப்பதே காரணம்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அந்த கோவைகள் வரும்போது ஆங்கில மொழி பெயர்ப்புகளில் தாமதம் காணப்படுகிறது.

ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தமிழ் நீதியரசர்கள் உள்ளனர் அவர்களிடம் அந்த வழக்குகளை ஒப்படைக்கலாம். இல்லாவிட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இதன் மூலம் வழக்கு தாமதங்களை தவிர்க்கலாம் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நீதிமன்றங்களில் மொழி பெயர்ப்பாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறையே இதற்கு காரணம். இதனை தவிர்க்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

தொடர்ந்தும் உரையாற்றிய சார்ள்ஸ் நிர்மலநாதன், பொய்யான வழக்குத் தாக்கல்களும் நீதிமன்ற நடவடிக்கையின் தாமதத்துக்கு ஒரு காரணியாக உள்ளன. உதாரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் எங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். எவ்வித முறைப்பாடும் இன்றி மக்களுக்கு இடையூறு என வழக்கை தொடர்ந்துள்ளனர். இது முறையற்றது.

இதேவேளை நீண்ட காலமாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடனும் உங்களுடனும் (நீதியமைச்சர்) கலந்துரையாடியுள்ளோம். அண்மையில் தேவதாசன் என்ற புற்றுநோய் நோயாளி விடுதலை செய்யப்பட்டார். அதற்கு அரசுக்கு நன்றி கூறுகின்றோம்.

அத்துடன் நவரத்தினம் மற்றும் மதனசேகரம் என்ற கைதிகள் இருவர் நோய் வாய்ப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை அரசியல் கைதிகள் பலருக்கு புதிதாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

யாராயினும் வழக்கு தாமதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு தாமதங்களே குற்றங்கள் அதிகரிக்க காரணமாக அமைகின்றன. எதிர்காலத்தில் வழக்குகளை வகைப்படுத்தி அதை முடிப்பதற்கு காலவரையறைகளை நிர்ணயம் செய்து அதை விசாரிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment