மாணவர்களுக்கு மின்னஞ்சல் உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளிட வேண்டாம் : TRCSL பதிவுடனான கையடக்கத் தொலைபேசிகளையே கொள்வனவு செய்யவும் - பொலிஸார் விடுக்கும் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 6, 2023

மாணவர்களுக்கு மின்னஞ்சல் உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளிட வேண்டாம் : TRCSL பதிவுடனான கையடக்கத் தொலைபேசிகளையே கொள்வனவு செய்யவும் - பொலிஸார் விடுக்கும் வேண்டுகோள்

பாடசாலை மாணவர்களுக்காக மின்னஞ்சல் (e-mail) கணக்குகளை உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளீடு செய்யாது மாணவர்களின் சரியான வயது உள்ளிட்ட தகவல்களை வழங்குமாறு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் இணையவழிக் கல்வி பிரபலமடைந்தமையால் பிள்ளைகளின் பயன்பாட்டுக்காக கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட கணினி சாதனங்களை அவர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும், ஸ்மார்ட் போன்களை வழங்கும்போதும், மின்னஞ்சலைத் தொடங்கும்போதும் பெற்றோர்களின் தரவை வழங்குவதன் மூலம், குழந்தைகள் எந்தவொரு இணையத்தளத்தையும் அணுகுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். 

அப்படி இல்லாமல், குழந்தைகளின் சரியான வயது உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் தேவையற்ற வீடியோக்கள் மற்றும் இணையத்தளங்களைப் பார்ப்பதற்கு பிள்ளைகளுக்கான அணுகல் தானாகவே கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தலைமையில் அண்மையில் கூடியபோதே பொலிஸ் அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

தொலைபேசியைப் பயன்படுத்தும்போது இலங்கைத் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) குறித்த கையடக்கத் தொலைபேசி அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். 

அதாவது எந்தவொரு குற்றச் செயலுக்கும் கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டால், அதை விரைவாக சமாளிக்கும் திறன் இந்த கையடக்கத் தொலைபேசிகளுக்கு உள்ளது. 

அதாவது தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (TRCSL) பதிவு செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில் சிம் அட்டைகளை இடும்போது, ​​அது தொடர்பான தகவல்களை ஆணைக்குழு பெறுகிறது. 

எனவே, கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்யும்போது, அவை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டவையா என்பதை உறுதிசெய்துகொள்ளுமாறும் பொலிஸ் அதிகாரிகள் குழு முன்னிலையில் தெரிவித்தனர்.

அத்துடன், தேசிய நல்லிணக்கம் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இசுரு தொடங்கொட, மாயாதுன்ன சிந்தக அமல், ராஜிகா விக்கிரமசிங்ஹ மற்றும் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment