அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் தற்காலிக வெளிநாட்டுப் பயணத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (02), வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொது விளையாட்டரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய விளையாட்டு வீரர்களுடனான சந்திப்பின்போது புலனாய்வு பிரிவு உறுப்பினர் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதம் மற்றும் தகராறு தொடர்பான வழக்கு இன்றைய தினம் (06) கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் வாக்குமூலம் வழங்காமை தொடர்பில் பொலிஸார் முன்வைத்த விடயத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு தற்காலிகமான வெளிநாட்டு பயணத் தடையை நீதிமன்றம் விதித்துள்ளது.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் நேற்றையதினம் (05) வற்றாப்பளை விழாவொன்றின்போது ஆலயத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளரை நாளை (07) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதாக தெரிவித்து, ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பெண் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் (05) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு நாளை (07) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.
மற்றையநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கும் நாளை (07) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment