கோட்டா, மஹிந்த ஆணையில்தான் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதை மறக்கக்கூடாது - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 14, 2023

கோட்டா, மஹிந்த ஆணையில்தான் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதை மறக்கக்கூடாது - நாமல் ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு மக்கள் வழங்கிய ஆணையில்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதை மறக்கக்கூடாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாகக் கொண்ட கூட்டணியே எதிர்வரும் காலங்களில் ஆட்சியை கைப்பற்றும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

காலி பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) மாலை இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் அரசியலமைப்பு ஊடாக ரணில் விக்கிரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணை ஆகியவற்றுக்கு அமையவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதை மறக்கக்கூடாது.

69 இலட்சம் மக்களாணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காகவே அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்தோம். கட்சி என்ற ரீதியில் எமது தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

தேர்தலை பிற்போடுமாறு பொதுஜன பெரமுன ஒருபோதும் அரசாங்கத்திடம் வலியுறுத்தவில்லை. வெகுவிரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியே எதிர்வரும் காலங்களில் ஆட்சியை கைப்பற்றும்.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் நோக்கம் எமக்கு கிடையாது. இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானம் பிரச்சினைக்குரியது. இவ்விடயத்தில் சகல தரப்பினரது ஆலோசனைகளையும் பெற்று முரண்பாடற்ற தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment