(எம்.வை.எம்.சியாம்)
நாடளாவிய ரீதியில் கால்நடைகளிடையே தோல் கழலை நோய் பரவி வருகிறது. முஸ்லிம் மக்கள் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் கால்நடைகளிடையே இந்த நோய் பரவல் காரணமாக உழ்ஹிய்யாவுக்காக மாடுகளை பயன்படுத்துவது நாட்டில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும். இந்நிலையில் இது தொடர்பில் மார்க்க வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
மேலும், அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டில் பரவலாக கால்நடைகளிடையே தோல் கழலை நோய் இனங்காணப்பட்டுள்ளதாக பிராந்திய மிருக வைத்தியப் பிரிவுகள் மூலம் தெரிவிக்கப்படுவதை பொறுப்புள்ள சிவில் சமூக அமைப்பு என்ற வகையில் ஜம்இய்யத்துல் உலமா அறிந்திருக்கும். இந்த நோய் தொற்றின் விளைவுகள் பற்றியும் தற்போது பரவலாக பேசப்படுகிறது.
உழ்ஹிய்யாவுக்கான மிருகங்களில் இலங்கையில் பிரதானமாக மாட்டை வழங்குவதையே பெரும்பாலும் நாம் வழமையாகக் கொண்டுள்ளோம். நோய்த் தொற்று தீவிரமாகியுள்ள நிலையில் மாடுகளை உழ்ஹிய்யாவுக்காக பயன்படுத்துவதானது பாரிய விளைவுகயை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பான மார்க்க வழிகாட்டுதல் அவசியப்படுகிறது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெளிவான விளக்கத்தை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும். அத்தோடு உடனடியாக மார்க்கத் தீர்ப்பொன்றை அறிவித்து எதிர்நோக்கவிருக்கும் பிரச்சினைகளிலிருந்து சமூகத்தை காப்பாற்ற வழிவகுக்க வேண்டும்.
மேலும், இது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையடுத்து மக்களுக்கு தெளிவூட்டல் வழங்குவதற்கும் பள்ளிவாசல்களுக்கு முறையான வழிகாட்டுதல் வழங்குவதற்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment