தொல்பொருள் இடங்களை பாதுகாக்கும் நடவடிக்கையை இனவாத கோணத்தில் நோக்க வேண்டாம் - அகிலவிராஜ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 14, 2023

தொல்பொருள் இடங்களை பாதுகாக்கும் நடவடிக்கையை இனவாத கோணத்தில் நோக்க வேண்டாம் - அகிலவிராஜ்

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் புறாதன தொல்பொருட்கள் இருக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை இன, மதவாத கோணத்தில் பார்க்கக்கூடாது. அத்துடன் தொல்பொருட்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்போது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை முகாமைத்துவம் செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்தை ஒருசில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனை இனவாத, மதவாத போக்கில் விமர்சித்துக் கொண்டு அதனை அரசியலாக்கும் நடவடிக்கையை காண்கிறோம். தொல்பொருள் விடயத்தை உலக நாடுகள் முகாமைத்துவ விடயமாகவே பார்த்து வருகிறது.

அதற்கு காரணம். தொல்பொருட்களின் பெறுமதிமிக்க பிரமிட்டுகளை பாதுகாத்துக் கொள்வதுடன் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்பொருட்களை முகாமைத்துவம் செய்துகொள்ள வேண்டும் என்பதே இன்று உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கும் நிலைப்பாடாகும்.

அதன் பிரகாரம் தொல்பொருள் இடங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அதேநேரம் மக்களின் வாழ்க்கைக்கு அதன் மூலம் நன்மை கிடைக்கும் வகையில் அதனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக சுமார் 2500 வருடங்கள் வரலாற்றைக் கொண்ட எமது நாட்டில் எந்த பிரதேசத்திலும் பெறுமதிமிக்க புறாதன தொல்பொருட்கள் இருப்பதற்கு இடமிருக்கிறது.

குறிப்பாக குருணாகலை மாவட்டத்தில் 4 இராசதானிகள் இருக்கின்றன. அதனால் அனைத்து பிரதேசங்களிலும் தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்கள் இருக்கின்றன. அந்த இடங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதேநேரம் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் சில இடங்களில் மலசலகூட குழி ஒன்றை தோண்டும்போதும் தொல்பொருள் பிரச்சினை ஏற்படுகிறது.

அதேநேரம் இந்த தொல்பாெருள் இடங்களை நாட்டு வருமானத்தை அதிகரிக்கும் இடங்களாக மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எமது அரசாங்கத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானத்தில் கலாசார மத்திய நிலையத்தின் மூலம் 2 பில்லியன் ரூபா வழங்கி இருந்தோம். அந்த பணத்தின் மூலமே நாட்டில் விகாரைகள் மற்றும் ஏனைய மதஸ்தலங்களின் நிர்மானங்களுக்கு பகிர்ந்தளித்தாேம்.

அதனால் தொல்பொருட்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்போது அதனை இனவாத கோணத்தில் பார்க்காமல் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று தொல்பொட்களை இனவாத அடிப்படையில் பார்க்க முற்பட்டால் அது பிரச்சினையை ஏற்படுத்தும். இதனை அரசியலாக்க வேண்டாம் என்றே அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். 

அத்துடன் தொல்பொருள் பாதுகாக்கும் குழுவின் அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் தொல்பொருள் ஆய்வாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியதற்கும் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக கடமையாற்ற செல்வதாக தெரிவித்தே பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதனால் எதிர்க்கட்சிகள் இதனை இனவாத கோணத்தில் பார்க்கக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment