இன்று முதல் 25 மாவட்டங்களில் கடவுச்சீட்டு Online மூலம் விநியோகம் : கை விரல் அடையாளங்களுக்கான பிரதேச செயலகங்களின் விபரங்களும் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 14, 2023

இன்று முதல் 25 மாவட்டங்களில் கடவுச்சீட்டு Online மூலம் விநியோகம் : கை விரல் அடையாளங்களுக்கான பிரதேச செயலகங்களின் விபரங்களும் வெளியீடு

நிகழ்நிலை முறைமை  (Online) ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கு கைரேகை அடையாளத்தை பதிவு செய்யும் புதிய வழிமுறை ஹோமாகம பிரதேச செயலகத்தில் முதலாவதாக புதன்கிழமை (14) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

25 மாவட்டங்களிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக இன்று முதல் இந்த சேவையை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுமக்களுக்கு அசௌகரியம் இல்லாத வகையில் நிகழ்நிலை முறைமை ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் புதிய தொழில்நுட்ப வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நிகழ்நிலை முறைமை ஊடாக விண்ணங்களை சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள விண்ணப்பதாரர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிரதேச செயகல பிரிவுகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உப காரியாலயங்களில் கைரேகை அடையாளத்தை பதிவு செய்து உரிய சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.

நிகழ்நிலை முறைமை ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் புதிய முறைமையின் ஆரம்ப நிகழ்வு இன்று வியாழக்கிழமை ஹோமாகம பிரதேச செயலக பிரிவில் இடம்பெறவுள்ளது. இந்த புதிய நிகழ்நிலை சேவையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஹோமாகம பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிக்கையில், இன்றைய தினம் முற்பகல் ஹோமாகம பிரதேச செயலகத்தில் இச்செயற்திட்டம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒரு நாள் சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அவர், ஒன்லைன் மூல விநியோகம் நடைபெற்ற போதும் அவசியமானால் எவரும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு நேரடியாக வருகை தந்து, அதற்கான விண்ணப்பத்தை ஒப்படைக்கவும் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இப்புதிய வேலைத்திட்டத்தின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்ததன் பின்னர் மூன்று தினங்களுக்குள் கடவுச்சீட்டு கூரியர் சேவைக்கு ஒப்படைக்கப்படும். அதனையடுத்து அதனை வீட்டுக்கே பெற்றுக் கொள்ளவும் முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குடிவரவு, குடியகல்வு திணைக்களமானது மக்களுக்காக சிறந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் கடவுச்சீட்டுக்காக ஒன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஒன்லைன் மூலமாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போர் அவர்களது கை விரல் அடையாளத்தை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களுடன் இணைந்ததாக, செயற்படும் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட பிரதேச செயலகங்களின் விபரங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, பொத்துவில்

அநுராதபுரம் மாவட்டத்தில் நுவரகம, கெகிராவை, ஹொரவபொத்தான

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை, அப்புத்தளை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, காத்தான்குடி

கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம, சீதாவக்க

காலி மாவட்டத்தில் கரந்தெனிய, அக்மீமன, நெலுவ

கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, கம்பஹா, மீரிகம

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை, திஸ்ஸமஹாராம

யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி, பருத்தித்துறை

களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, மத்துகம, பாணந்துறை

கண்டி மாவட்டத்தில் கம்பளை, குண்ட சாலை, பூஜாபிட்டிய

கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, ருவன் வெல்ல

கிளிநொச்சி மாவட்டத்தில் கரச்சி

குருநாகல் மாவட்டத்தில் வடமேல் மாகாண பிரதேச செயலகம், குளியாப்பிட்டி, நிக்கவரெட்டிய

மன்னார் மாவட்டத்தில் மன்னார் மேற்கு, மாத்தளை மாவட்டத்தில் நாவுல

மாத்தறை மாவட்டத்தில் அதுரலிய, தெவி நுவர

மொனராகலை மாவட்டத்தில் புத்தள

முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுக, வலப்பனை

பொலனறுவை மாவட்டத்தில் திம்புலாகல, எலஹெர, ஹிங்குரன்கொட

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், சிலாபம்

இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை, குருவிட்ட, எம்பிலிப்பிட்டிய

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா

வவுனியா மாவட்டத்தில் வெங்கல செட்டிக்குளம் என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment