தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் மோசடி : சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 28, 2023

தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் மோசடி : சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்யும் மாபியாக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால், தாம் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருந்தாளர்கள் சங்கத்துடன் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற சந்திப்பின்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரையும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தையும் வலியுறுத்துகின்றோம்.

இந்த அதிகார சபையின் பணிப்பாளர் சபை முழுமையற்றதாகக் காணப்படுகிறது. மருந்தகங்கள் தொடர்பான நியமனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

மருந்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான 9 பிரிவுகளின் தலைவர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் விசேட நிபுணர் குழுக்களுக்கும், மீளாய்வு குழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எமது நாட்டு சட்டங்களுக்கமையவே மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு, அவை பதிவு செய்யப்படும். ஆனால் இந்த சட்டங்களுக்கு அப்பால் சென்று பதிவு செய்யும் நடைமுறையும் காணப்படுகிறது.

அதற்கமைய பதிவுகளைத் தவிர்த்து மோசடியான முறையில் பெரும்பாலான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் ஊடாகவே தரம் குறைந்த மருந்துகள் மக்களை சென்றடைகின்றன.

கண் சத்திர சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்ற மருந்துகள் உள்ளிட்ட முக்கிய மருந்துகளின் தரம் கட்டுப்பாட்டையிழந்து, மக்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்யும் மாபியாக்களை பாதுகாப்பதற்காகவா, தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வேறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன? இவ்வாறான மோசடிகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் உட்பட விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் சட்டநடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment