இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கான பஸ் சேவையை ஆரம்பியுங்கள் : தவறினால் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 16, 2023

இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கான பஸ் சேவையை ஆரம்பியுங்கள் : தவறினால் போராட்டம்

மன்னார் அல் அஸ்ஹர் மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கு இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் வீதி ஊடாக முன்னெடுக்கப்பட்டு வந்த பஸ் சேவை திடீர் என எவ்வித முன் அறிவித்தலும் இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலை முகாமையாளர், வட பிராந்திய அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும், அவர்கள் அசமந்த போக்குடன் செயல்படுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் அல் அஸ்ஹர் மஹா வித்தியாலயதிற்க்கு கரிசல், புதுக்குடியிருப்பு, தாராபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன்கருதி குறித்த பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

கரிசலில் இருந்து புதுக்குடியிருப்பு, தாராபுரம் ஊடாக மாணவர்களை ஏற்றி வரும் குறித்த பேருந்து காலை 7.20 மணி அளவில் மன்னார் பிரதேச செயலக வீதியை வந்தடையும். பின்னர் மாணவர்கள் அங்கிருந்து பாடசாலையை சென்றடைவார்கள்.

பாடசாலை முடிவடைந்த பின்னர் மதியம் 2.10 மணி அளவில் மன்னார் பிரதேச செயலக வீதியில் நிற்கும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு தாராபுரம் சென்று அங்கிருந்து புதுக்குடியிருப்பு மற்றும் கரிசல் கிராமங்களுக்குச் சென்று மாணவர்களை இறக்கி விடுவது வழமை.

எனினும், குறித்த இரு சேவைகளும் இடை நிறுத்தப்பட்டு சுமார் ஒரு மாதங்களை கடந்துள்ளது. இவ்விடயம் குறித்து பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் பல தடவை எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் மன்னார் சாலை முகாமையாளருக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாடசாலை நிர்வாகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே, இடைநிறுத்தப்பட்ட சேவையை உடன் மன்னார் சாலை முகாமையாளர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் பாடசாலை நிர்வாகத்தினர் இணைந்த எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment