வேகமாக பயணித்த டிப்பர் : தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே பலி - News View

About Us

About Us

Breaking

Friday, June 16, 2023

வேகமாக பயணித்த டிப்பர் : தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே பலி

வவுனியா, கன்னாட்டி பிரதேசத்தில் பாடசாலைக்கு மகளை அனுப்புவதற்காக வீதியோரத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த தாயும், மகளும் கன்டர் ரக வாகனம் மோதியதில், சம்பவ இடத்தில் உடல் நசுங்கிப் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் இன்று (16) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றது.

கன்னாட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது சிவலோகநாதன் சுபோகினி மற்றும் இவரது 6 வயது மகள் டினுசிகா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கன்னாட்டி பிரதேசத்திலிருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டுக்கு முன்பாகவுள்ள வீதியில் பஸ்ஸுக்காக இவர்கள் இருவரும் காத்திருந்தனர். இதன்போது, வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி வேகமாக பயணித்த கன்டர் ரக வாகனம் வீதியை விட்டு விலகிச் சென்று, வீதியோரத்தில் நின்ற இருவர் மீதும் மோதியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வேளையில் மற்றொரு சிறுவன் கன்டர் ரக வாகனத்தைக் கண்டதும் ஓடிச் சென்று விபத்தை தவிர்த்துக் கொண்டதாக, விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

கன்டர் ரக வாகனத்தில் பயணித்த மூவரில், ஒருவர் விபத்தையடுத்து தப்பிச் சென்றதுடன், ஏனைய இருவரையும் ஊர் மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விபத்தையடுத்து கன்டர் ரக வாகனத்தை பொதுமக்கள் சராமாரியாக தாக்கி சேதப்படுத்தியதுடன், அதை எரிக்க முற்பட்டனர். இதனால், அப்பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்ற நிலை நிலவியதுடன், மன்னார் வீதியூடான போக்குவரத்தும் சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர். விபத்து தொடர்பாக பறையனாளன்குளம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

ஓமந்தை விசேட நிருபர்

No comments:

Post a Comment