(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளன. இந்த முரண்பாடுகளின் விளைவாக வெகுவிரைவில் பொதுத் தேர்தல் இடம்பெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மொனராகலையில் புதன்கிழமை (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அவரை தெரிவு செய்த பொதுஜன பெரமுனவினருக்குமிடையில் முரண்பாடுகள் வலுவடைந்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தமைக்காக பொதுஜன பெரமுனவினர் அமைச்சுப் பதவியைக் கோருகின்றனர். எனினும் 'இன்று போய் நாளை வா' என்பதைப் போன்று அமைச்சுப் பதவிகளை வழங்காமல் ஜனாதிபதி காலம் கடத்திக் கொண்டிருக்கின்றார்.
எதிர்வரும் ஒன்றரை ஆண்டுக்குள் நிச்சயம் பொதுத் தேர்தல் இடம்பெறும். அதுவரை மாத்திரமே இவர்களது அரசியல் சூது விளையாட்டுக்களும் செல்லுபடியானதாகும்.
எந்த சந்தர்ப்பத்தில் எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவுள்ளோம். ஆனால் பொதுஜன பெரமுனவினரைப் போன்று ஐக்கிய மக்கள் சக்தியை ஏமாற்ற முடியாது.
அரசாங்கத்துக்கு சார்பான சில ஊடகங்கள் பல போலியான செய்திகளை உருவாக்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான ஊடகங்கள் கூறுவதைப் போன்று ஒருபோதும் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையப் போவதில்லை. நாம் பதவிக்காக மக்களை ஏமாற்றுபவர்கள் இல்லை. மக்கள் ஆணையுடனேயே ஆட்சியைக் கைப்பற்றுவோம்.
தற்போது மின் கட்டண அதிகரிப்பானது அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது அடிமட்ட மக்களையாகும். கோடீஸ்வரர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோடீஸ்வரர்களுக்கு சலுகைகளை வழங்கியமையின் காரணமாகவே இன்று நாடு வங்குரோத்தடைந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அந்த வழியையே பின்பற்றி ராஜபக்ஷக்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார் என்றார்.
No comments:
Post a Comment