கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம் : பரீட்சை நடத்த தடை விதித்த நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 16, 2023

கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம் : பரீட்சை நடத்த தடை விதித்த நீதிமன்றம்

தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையிலிருந்து பல்கலைக்கழக மாணவன் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை பரீட்சை நடாத்தக் கூடாதென மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தாடி வைத்திருந்தமைக்காக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு பீடத்தைச் சேர்ந்த மாணவன் நுஸைக் இரண்டு விரிவுரையாளர்களால் தாடியை மழிக்கும் வரைக்கும் விரிவுரைகளுக்கு வர முடியாது என்றும் எதிர்வரும் பரீட்சையை எழுத முடியாதென்றும் அறிவித்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ஜூன் மாதம் 01ஆம் திகதி முறைப்பாடொன்றைச் செய்திருந்தார்.

ஜூன் மாதம் 13ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட இம்முறைப்பாட்டில் பல்கலைக்கழகம் சார்பாக பீடாதிபதி மட்டும் பிரதி துணைவேந்தர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். 

குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான சட்டமுதுமானி முகைமின் காலித் மற்றும் சட்டத்தரணி உவைஸ் ஆகியோர் மாணவன் நுசைக் சார்பில் ஆஜராகியிருந்தனர்.

விசாரணை இறுதியில் மாணவனை தாடி வைத்தவாறே பரீட்சை எழுத அனுமதிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் பிரதிவாதிகள் பீடக் கூட்டத்தில் முடிவெடுத்தே சொல்ல வேண்டும் என்று பதிலளித்திருந்தனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை (19) மாணவனைப் பரீட்சை எழுத நிர்வாகம் அனுமதிக்காது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (15) இலங்கையின் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கட்டாணை ( WRIT) மனுவொன்றை மாணவன் தாக்கல் செய்திருந்ந்தார். 

குறித்த வழக்கு இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் மரைக்கார் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. 

மாணவன் நுசைக் சார்பில் ஜனாதிபதி  சட்டத்தரணி சாலிய பீரிஸும், அறிவுறுத்தல் சட்டத்தரணியாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி றுடானி ஸாஹிரரும் ஆஜராகி இருந்தனர்.

இந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றப் பதிவாளருக்கு  கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் குறித்த பீடத்தின் பரீட்சை ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பரீட்சை நடந்தால் மாணவன் நுசைக் பரீட்சையை எதிர்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நீதிமன்றிடம் முன்வைத்தார். 

அதனைச் செவியுற்ற நீதிமன்றம் எதிவரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வரும் வரைக்கும் மாணவன் நுசைக்கின் பீடப் பரீட்சை நடாத்தப்படக் கூடாது என பல்கலைக்கழகத்தை அறிவுறுதியிருக்கிறது.

குறிப்பிட்ட விடயம் நீதிமன்றப் பதிவாளரினூடாக கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அறிவிக்கப்பட்டிமிருக்கிறது.

அதனடிப்படையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சை எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி வரைக்கும் இடை நிறுத்தப்பட்டிருக்கிறது.

குரல்கள் இயக்கம் மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு அமைப்பாகும். இவ்வழக்கில் மிகவும் வேகமகவும் துரிதமாகவும் குரல்கள் இயக்கம் செயற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment