யானை - மொட்டு கூட்டணி அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தை எந்தளவுக்கு புறக்கணிக்கின்றது என்பதற்கு கல்வியற் கல்லூரி ஆசிரிய நியமனங்கள் சிறந்ததொரு உதாரணம் : இம்ரான் எம்பி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 14, 2023

யானை - மொட்டு கூட்டணி அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தை எந்தளவுக்கு புறக்கணிக்கின்றது என்பதற்கு கல்வியற் கல்லூரி ஆசிரிய நியமனங்கள் சிறந்ததொரு உதாரணம் : இம்ரான் எம்பி

யானை - மொட்டு கூட்டணி அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தை திட்டமிட்டு புறக்கணித்து வருகின்றது. இது குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை கிண்ணியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். 

அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தை எந்தளவுக்கு புறக்கணிக்கின்றது என்பதற்கு தற்போதைய கல்வியற் கல்லூரி ஆசிரியர் நியமனம் சிறந்ததொரு உதாரணமாகும்.

திருகோணமலை மாவட்டத்தைப் பொருத்தவரை இங்கு ஆசிரியர் பற்றாக்குறை மிக அதிகளவில் காணப்படுகின்றது. உதாரணத்திற்கு கணித பாடத்துக்கு திருகோணமலை மாவட்டத்தில் 137 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதேபோல ஆரம்பக் கல்விக்கு 106 பற்றாக்குறையும், தமிழ் மொழி பாடத்துக்கு 78 பற்றாக்குறையும், புவியியல் பாடத்துக்கு 57 பற்றாக்குறையும் காணப்படுகின்றது. இவ்வாறே விஞ்ஞான பாடத்துக்கு 52 உம், தகவல் தொழில்நுட்ப பாடத்துக்கு 52 ஆசிரியர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. இதேபோல ஏனைய பாட ஆசிரியர்களுக்கும் பெருமளவு பற்றாக்குறை நிலவுகின்றது.

இவ்வளவு பற்றாக்குறை இருந்தும் இம்முறை நியமனம் பெறுகின்ற திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நான் கல்வி அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினேன். கிழக்கு மாகாண ஆளுநருக்கும் தெளிவுபடுத்தினேன். பாராளுமன்றத்திலும் உரையாற்றினேன்.

திருகோணமலை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க திருகோணமலை மாவட்ட ஆசிரியர்களை இம்மாவட்டத்திற்கே நியமிக்குமாறு கோரினேன். எனினும், திருகோணமலை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் அப்படியே இருக்க திருகோணமலை மாவட்ட கல்விக் கல்லூரி ஆசிரியர்களும் வேறு மாகாணங்களுக்கே நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தித்து இம்மாவட்ட கல்வி பின்னடைவை சீர் செய்ய இந்த அரசாங்கத்துக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இதனால் வேறு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள குறித்த ஆசிரியர்களும், அவர்களது பெற்றோர்களும் பெரும் சிரமத்தை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய வாழ்க்கைச் செலவு போராட்டத்துக்கு மத்தியில் இதன் தாக்கம் மிக அதிகம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இது தொடர்பாக மொட்டுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பிரதிநிதி ஏதும் நடவடிக்கையை முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. அதேபோல யானைக் கட்சியின் உள்ளூர் அமைப்பாளர்கள் கூட இதில் கவனம் செலுத்தவில்லை. இதனால் திருகோணமலை மாவட்டம் தொடர்ந்தும் கல்வியில் பின் தங்கி நிற்கும் நிலையே உள்ளது.

இவற்றை வைத்துப் பார்க்கும் போது யானை – மொட்டு கூட்டணி அரசாங்கம் திருகோணமலை மாவட்ட மக்களை புறக்கணிக்கின்றது என்பது தெளிவாகின்றது. இவர்களுக்கு இம்மக்களது வாக்கு மட்டும் தேவை. எனினும், அவர்களது தேவைகளை நிறைவு செய்து கொடுக்க இந்த அரசாங்கம் தயாரில்லை என்பதை பொதுமக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment