போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன் உயிரிழந்தது எப்படி? - வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 4, 2023

போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன் உயிரிழந்தது எப்படி? - வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்

சென்னை புறநகர் சோழவரம் பகுதியில் இயங்கி வந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன்(13) ஒருவன் தாக்கப்பட்டு இறந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

மறுவாழ்வு மையத்தை நடத்திய நான்கு நபர்கள் சிறுவனை அடித்துக் காயப்படுத்தியது உடற்கூராய்வில் தெரிய வந்ததால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சோழவரத்தில் செயல்பட்ட தனியார் மறுவாழ்வு மையம், பெரியவர்களுக்கு மட்டுமே சிகிச்சை தரும் மையமாக இருந்தாலும், சட்டத்திற்குப் புறம்பான முறையில், சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்தது சிறுவனின் உயிரிழப்பு வாயிலாகத் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கும்மிடிபூண்டியைச் சேர்ந்த சிறுவன், கடந்த சில நாட்களாக பாடசாலைக்குச் செல்லவில்லை என்றும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால், சிறுவனை பெற்றோர் சோழவரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஜனவரி 21ஆம் திகதி சேர்த்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெப்ரவரி 1ஆம் திகதியன்று நள்ளிரவில் சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சிறுவன் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்டதால், சிறுவனின் இறப்பில் பெற்றோர் சந்தேகம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

முதலில் சந்தேக மரணம் என்று பதிவான சிறுவனின் இறப்பு, தற்போது உடற்கூறாய்வு முடிவுகள் மற்றும் மறுவாழ்வு மைய பணியாளர்களிடம் நடந்த விசாரணையில், தாக்குதலால் சிறுவன் இறந்தது உறுதியானதால், கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்று ஆவடி பொலிஸ் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

18 வயதுக்குக் கீழே உள்ள சிறுவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை தேவைப்பட்டால், அவர்கள் சிறுவர்களுக்கான மையங்களில் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என சமூக நலத்துறையின் விதிகள் கூறுகின்றன.

ஆனால் சோழவரத்தில் இயங்கி வந்த மறுவாழ்வு மையத்தில் 10 நாட்களாக, சட்டத்திற்குப் புறம்பாக சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையாகியுள்ளது.

தனியார் மறுவாழ்வு மையத்தில் ஏன் சிறுவனைச் சேர்த்தனர் என்று அறிந்து கொள்வதற்காக அவனது பெற்றோரிடம் பேச முயன்றோம். அவர்களைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சிறுவர்களுக்கான மையங்கள் குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் குறைவாக இருப்பதால், பெரியவர்களுக்கான மையங்களில் சிறுவர்கள் சேர்க்கப்படுவதாகக் கூறுகிறார்.

''அரசின் ஆதரவோடு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக சிறுவர்களுக்கான ஐந்து மறுவாழ்வு மையங்கள் தமிழ்நாட்டில் 2017 இல் இருந்து செயல்பட்டு வருகின்றன.

அரசு பொறுப்பேற்று நடத்தும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்குவது பற்றி ஆலோசித்து வருகிறோம். தற்போது செயல்பாட்டில் உள்ள மையங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சோழவரத்தில் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதியன்று உயிரிழந்த சிறுவன் தொடர்பான வழக்கில் நான்கு பேர் கைதாகியுள்ளனர். பிற தனியார் மறுவாழ்வு மையங்களில் சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்று சோதனை செய்யப்படும்,'' என்றார்.

தமிழ்நாட்டில், சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் அரசின் உதவியுடன் இயங்கும் சிறுவர்களுக்கான போதை மறுவாழ்வு மையங்கள் லைஃப்லைன் என்ற தொண்டு நிறுவனத்தின் வாயிலாக நடத்தப்படுகின்றது.

ஒவ்வொரு மையத்திலும் குறைந்தது 15 சிறுவர்கள் வரை தங்கி சிகிச்சை எடுக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தனியார் நிறுவனங்கள் நடத்தும் ஒரு சில மறுவாழ்வு மையங்களில் பெரியவர்களுடன் குழந்தைகளும் தங்க வைக்கப்படும் நடைமுறை சிறுவனின் உயிரிழப்பைத் தொடர்ந்து கவனம் பெற்றுள்ளது.

பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தனி மையங்கள் ஏன் தேவை?

லைஃப்லைன் நிறுவனத்தின் இயக்குநர் செழியனிடம், பெரியவர்களுக்கு சிகிச்சை தரும் மையங்களில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் என்ன பிரச்சினைகள் உள்ளன என்று கேட்டோம். ''பெரியவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை குழந்தைகளுக்குத் தர முடியாது.

ஒரு சில நேரங்களில், போதைக்கு அடிமையான நபர் மோசமான பாதிப்புடன் இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி, தனியாக ஓர் அறையில் வைத்து சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலை இருக்கும்.

இதுபோன்ற சிகிச்சைகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியாது. பெரியவர்களுக்கு தூக்கத்தை அதிகரிக்கும் மருந்துகளைக்கூட மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். அதுபோன்ற சிகிச்சைகளைக் குழந்தைகளுக்கு அளிக்க முடியாது.

மேலும் பெரியவர்கள் நடந்துகொள்வதை நேரடியாக குழந்தைகள் பார்ப்பது அவர்களுக்குக் குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால், குழந்தைகளைத் தனியாக சிகிச்சைக்கு உட்படுத்துவதுதான் சரி,'' என்கிறார் செழியன்.

ஒரு சில குழந்தைகள் மிகவும் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்றும் போதைப் பழக்கத்தின் தாக்கத்தில் இருந்து அவர்களை மீட்க பல கட்டங்களாக ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் கூறிய செழியன், பெரியவர்களுடன் உள்ள மையத்தில் சில நேரங்களில் குழந்தைகள் தாக்கப்படவும் வாய்ப்புள்ளது என்றார்.

''குழந்தைகளைப் பொறுத்தவரை ஒரு சில நாட்கள் தீவிரமான மனநிலையில் இருப்பார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வந்தால், அவர்கள் போதைப் பழக்கத்திலிருந்து வெளியேறும் வாய்ப்புகள் அதிகம்.

பெரியவர்களை விட குழந்தைகளின் உலகம் மிகவும் வித்தியாசமானது என்பதால் அவர்களுக்கு மருந்துகள் கொடுப்பது போலவே தோழமையான சிகிச்சை மிகவும் முக்கியம். அதனால், சிறுவர்களுக்குத் தனிப்பட்ட மையம்தான் தீர்வைக் கொடுக்கும்,'' என்கிறார் செழியன்.

ஆய்வு செய்ய வேண்டிய மையங்கள்

சோழவரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்ட சிறுவன் பத்து நாட்களுக்கு முன்னர்தான் அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டதாகவும், மையம் நடத்தியவர்கள் கட்டையால் அடித்து சிறுவனைத் தாக்கியதால் சிறுவன் இறந்துள்ளான் என்றும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மையத்தைப் போல சென்னை புறநகர்ப் பகுதிகளில் பல மையங்களில் முறையான அனுமதி இன்றி குழந்தைகள் தங்க வைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன்.

''போதைப் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள் பலர், பெரியவர்கள் சிகிச்சை எடுக்கும் மையங்களில் சேர்க்கப்படுகின்றர். சில மையங்கள் எந்தவித உரிய ஆவணங்கள் இல்லாமலும் செயல்படுகின்றன.

சிறுவர்களையும் அதில் வைத்திருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு சோழவரம் மறுவாழ்வு மையத்தில் நடந்த இறப்பு ஒரு சாட்சி. தற்போது செயல்பாட்டில் உள்ள மையங்களை ஆய்வு செய்து சிறுவர்களை உடனடியாக மீட்கவேண்டும்,'' என்கிறார் தேவநேயன்.

BBC

No comments:

Post a Comment