18 வயதில்தான் திருமணம் செய்ய வேண்டுமென இஸ்லாம் கூறவில்லை : ஜேவிபி முஸ்லிம்களைக் கொச்சைப்படுவதாக அதாஉல்லா பகிரங்க குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 4, 2023

18 வயதில்தான் திருமணம் செய்ய வேண்டுமென இஸ்லாம் கூறவில்லை : ஜேவிபி முஸ்லிம்களைக் கொச்சைப்படுவதாக அதாஉல்லா பகிரங்க குற்றச்சாட்டு

பாறுக் ஷிஹான்

சிறுபாராய திருமணங்கள் தொடர்பில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துகின்ற ஜேவிபி கட்சியின் செயற்பாடு மேலோங்க காரணம் முஸ்லீம் தலைமைகளுக்கே இவ்விடயம் தொடர்பாக தெளிவில்லை என்பதே ஆகும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பகுதியில் நேற்று சனிக்கிழமை (4) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி கட்சியினர் எனது நண்பர்கள். அவர்கள் 3 பேரும் எதிரக்கட்சி என்பதனால் எதிர்க்கின்ற எல்லா விடயங்களுக்கும் என்னால் உடன்பட்டுப்போக முடியாது.

அதாவது, நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள தலைமைத்துவங்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அறிந்த நல்ல நண்பர்கள்தான். ஆனால், அரசியல் ரீதியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடங்கள் கிடைக்கும் வரைக்கும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.

ஜேவிபி கட்சியினருக்கு இவ்விடத்தில் முக்கியமான விடயமொன்றினைக்கூற விரும்புகின்றேன்.

அதாவது, முஸ்லீம்கள் சிறு பாராய திருமணங்களை தவிர்த்து அவர்களுடன் இணைந்து செயற்பட முஸ்லீம் மக்களை அழைத்துள்ளதாக அறிகின்றேன். இதற்கு காரணம் முஸ்லீம் தலைமைகளுக்கே இவ்விடயம் தொடர்பாக தெளிவில்லை என்பதே ஆகும்.

18 வயதில்தான் திருமணம் செய்ய வேண்டுமென இஸ்லாம் கூறவில்லை. ஒரு மார்க்கமும் சொல்லவில்லை. அதாவது, ஒரு பெண் பருவமடைந்தால் அவள் அனைத்துக்கும் தகுதியானவள்.

35 வயது முதல் 45 வயது வரையுள்ள பெண்களுக்கே மணமகன் இன்மை காணப்படுகின்றது.

இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்குடன் முஸ்லீம்கள் இள வயதில் திருமணம் செய்கின்றார்கள் என்கின்ற கதைகளையெல்லாம் இஸ்லாம் புரியாதவர்கள் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு றவூப் ஹக்கீம் உட்பட சில அமைச்சர்கள் 17 வயதில் அல்ல 18 வயதில்தான் திருமணம் முடிக்க வேண்டுமென பைத்தியமாகக்கூறி வருகின்றனர். ஆனால், நான் இவ்விடயம் குறித்து நீதியமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கடுமையாக எதிர்த்திருக்கின்றேன்.

ஒரு தேவைக்கு இடமிருக்க வேண்டும். அதாவது, எல்லோரும் 15 முதல் 16 வயதில் திருமணத்தை முடிப்பதல்ல. 16 வயதுடைய பெண் ஒருவருக்கு தேவை இருக்கின்ற பட்சத்தில் நீதிமன்றம் சென்று குறிப்பிட்ட விடயத்தைக்கூறி நிருபித்து திருமணம் முடிக்க அனுமதிக்க வேண்டுமென அங்கு குறிப்பிட்டிருக்கின்றேன்.

இஸ்லாமியர்களை இவ்விடயத்தில் கொச்சைப்படுத்துகின்ற ஜேவிபியின் உரைகளுக்கு நாம் இடமளிக்க முடியாது.

அவர்கள் ஊர் ஊராக இங்கு சகல வட்டாரங்களையும் வெல்பவர்களாகவே வருகின்றார்கள். இது சாத்தியமற்றது. காரணம் அவர்களின் கடந்த கால வரலாறாகும். ஆனால், நண்பர்களின் கொள்கைகளில் உள்ள இவ்வாறான குழறுபடிகளை அவர்கள் திருத்தும் வரை எச்சரிக்கையாகவே நாம் இருக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சந்திப்புடன் தேசிய காங்கிரஸ் 18 உள்ளூராட்சி சபைகளில் தனித்தே போட்டியிடுகின்றது.

கிழக்கு மாகாணம் உட்பட வெளி மாவட்டத்திலும் பல பிரதேசங்களில் இம்முறை போட்டியிடுகின்றது.

அந்த வகையில், தனித்துவத்தைப் பாதுகாக்க எந்தவொரு தேசிய கட்சிகளோடும் கூட்டு சேராமல் தேசிய காங்கிரஸ் கட்சி தனியாக குதிரை சின்னத்தில் 18 சபைகளில் களம் காண்கின்றது என இச்செய்தியாளர் சந்திப்பில் உறுதிபடக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment