(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவன்ச, டலஸ், ஜி.எல். பீரிஸ் அணியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். ஹெலிகொப்டர் நெலும் மாவத்தையிலும், மெதமுலனயிலும் இனி தரையிறங்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்களின் பிரதிநிதிகளுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (01) இரவு பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகவே உள்ளோம். வெற்றி, தோல்வியை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில் பொதுஜன பெரமுன நாட்டுக்கு சேவையாற்றியுள்ளது.
யார் நாட்டுக்கு சேவை செய்தார்கள், யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை இருமுறை சிந்தித்து மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் தமது சுய அரசியல் இலாபத்திற்காக பொருளாதார நெருக்கடியை அரசியல் நெருக்கடியாக்கி 69 இலட்சம் மக்களாணையை காட்டிக் கொடுத்தார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல், டலஸ் மற்றும் ஜி.எல். பீரிஸ் அணியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியதால் கட்சி செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அரசாங்கத்தையும், பொதுஜன பெரமுனவையும் விமர்சித்துக் கொண்டு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலானோர் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள். பொதுஜன பெரமுனவிற்கு புண்ணியம் கிடைக்கும் வகையில் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு சென்றதை மறந்து விட்டார்கள்.
இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன அமோக வெற்றி பெறும். பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்ள பெரும்பாலானோர் முரண்பட்டுக் கொண்டார்கள். பொதுஜன பெரமுன கிராமத்திற்கு சேவையாற்றியுள்ளது, ஆகவே நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
No comments:
Post a Comment