யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின்போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, நாளை (03) 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியுமே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன.
பெப்ரவரி 04ஆம் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்புத் துறையின் முழு கண்காணிப்புடன் இந்த காணி விடுவிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக காணி உரிமையாளர்கள் வெளிப்படைத்தன்மையுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தொடர்ந்தும் பருத்தித்துறையிலுள்ள 09 முகாம்களில் தங்கியுள்ள 75 குடும்பங்களுக்கு பலாலி வடக்கு பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் 13 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இவ்வாறு விடுவிக்கப்படும் காணியில் அமைந்துள்ள நகர மண்டபம், அன்றைய தினமே வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, மீளக்குடியமர்த்தப்படும் 197 குடும்பங்களுக்கு, மீள்குடியமர்வுக்கு அவசியமான உதவித் தொகையை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான நகரஅபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment