ஒத்தி வைப்பால் அரசியலமைப்பு ரீதியான எந்தவொரு செயற்பாட்டுக்கும் இடையூறு ஏற்படவில்லை - அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

ஒத்தி வைப்பால் அரசியலமைப்பு ரீதியான எந்தவொரு செயற்பாட்டுக்கும் இடையூறு ஏற்படவில்லை - அரசாங்கம்

(எம்.மனோசித்ரா)

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உரையாற்ற வேண்டிய நிலைமை ஏற்படும்போது ஜனாதிபதியொருவரால் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படுகின்றமை சம்பிரதாயபூர்வமான விடயமாகும். அதற்கமைய இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையால் அரசியலமைப்பு ரீதியான எந்தவொரு செயற்பாட்டுக்கும் இடையூறு ஏற்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பாராளுமன்ற கூட்டத் தொடர் கடந்த 27 ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்காவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து அன்றையதினம் அக்கிராசன உரையாற்றவுள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது முறையாகவும் இவ்வாறு பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறித்து செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய ரீதியில் முக்கியத்துவம் மிக்க அறிவித்தலை விடுக்க வேண்டியேற்படின் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தல் சம்பிரதாயபூர்வமான ஒரு விடயமாகும். இதன் காரணமாக எந்த வகையிலும் அரசியலமைப்பு ரீதியிலான நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

ஒரு வாரத்திற்கு மாத்திரமே பாராளுமன்ற அமர்வுகள் தாமதமாகின்றன. எதிர்வரும் 8 ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையை ஆற்றுவார் என்றார்.

No comments:

Post a Comment