(எம்.மனோசித்ரா)
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) தலைவராக தொடர்ந்தும் செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. இக்குழுவின் செயற்பாடுகளை எவ்வித அழுத்தங்களும் இன்றி முன்னெடுப்பதற்கு இடமளிக்காவிட்டால் கட்சி ரீதியில் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுக்க நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசீம் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (7) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவராக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை நாம் நீண்ட காலமாக அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். அதற்கமைய சகல எதிர்க்கட்சிகளினதும் பொது இணக்கப்பாட்டுக்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் ஆளுந்தரப்பினர் ஒன்றிணைந்து வழமை போன்று அவர்கள் தரப்பிலிருந்தே ஒருவரை தெரிவு செய்துள்ளனர். அவரது பெயரை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே முன்மொழிந்ததோடு, ரோஹித அபேகுணவர்தன உறுதிப்படுத்தினார். இவர்களும் ஆளுந்தரப்பையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இவ்வாறு ஆளுந்தரப்பினர் அனைத்து விடயங்களில் முன்னணி வகிக்கும் போது எம்மால் எவ்வாறு இலக்கினை அடைய முடியும்?
கோப் குழுவின் செயற்பாடுகள் வெளிப்படை தன்மையுடனும், நம்பகத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதன் தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். மக்களின் கோரிக்கையை நிராகரித்து, அதற்கு முரணாக செயற்படும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறு பயணிப்பது?
நாட்டிலுள்ள நெருக்கடிகள் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) தலைவராக என்னை தெரிவு செய்துள்ளமைக்கு நன்றி கூறுகின்றேன்.
இருப்பினும் இந்த பதவியில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதா என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. காரணம் இதன் பணிகளை ஆற்றும் போது எவருக்கும் அடிபணியாமல், சுதந்திரமாக செயற்பட வேண்டும். எனவே அழுத்தங்கள் இன்றி கோபா குழுவின் தலைவராக என்னால் செயற்பட முடியாத நிலைமை ஏற்படுமாயின், கட்சி ரீதியில் முடிவொன்றை எடுக்க நேரிடும் என்றார்.
No comments:
Post a Comment