'உன் வாழ்க்கை முடிந்துவிட்டது' என சி.ஐ.டி.யினர் அச்சுறுத்தியபோது எனக்காக சட்ட போராட்டத்தை ஆரம்பித்தவரே அமரர் கெளரி சங்கரி தவராசா' - ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் - News View

About Us

About Us

Breaking

Monday, October 3, 2022

'உன் வாழ்க்கை முடிந்துவிட்டது' என சி.ஐ.டி.யினர் அச்சுறுத்தியபோது எனக்காக சட்ட போராட்டத்தை ஆரம்பித்தவரே அமரர் கெளரி சங்கரி தவராசா' - ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்

(எம்.எப்.எம்.பஸீர்)

'உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில், போலியான குற்றச்சாட்டுக்களின் கீழ், சி.ஐ.டி.யினர் என்னை கைது செய்தனர். எனது வாழ்க்கை முடிந்துவிட்டதாக அவர்கள் அச்சுறுத்தினர். அவ்வாறான சூழலில் முதன் முதலில் எனக்கு நம்பிக்கை கொடுத்து, எனக்காக சட்ட போராட்டத்தை ஆரம்பித்தவரே அமரர் கெளரி சங்கரி தவராசா' என மனித உரிமைகள் தொடர்பிலான சிரேஷ்ட சட்டத்தரணியும், சர்வதேச மன்னிப்பு சபையால் அரசியல் கைதியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளவருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உணர்வு பூர்வமாக தெரிவித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்றுமுன்தினம் (1) வெள்ளவத்தை - குளோபல் டவர்ஸ் ஹோட்டலில் நடந்தது. இதன்போது கெளரி சங்கரி தவராசாவின் கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய 'கெளரி - நீதிக்கன குரல்' எனும் புத்தகமும் வெளியிடப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் எஸ். துறைராஜா, மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்.டி. மொஹம்மட் லபார், சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் ரோஹினி மாரசிங்க, குளியாபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய உள்ளிட்ட நீதிபதிகள், ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் சேவை பெறுநர்களான அரசியல் பிரமுகர்கள், என பலரும் இதில் பங்கேற்றனர்.

இதன்போது அமரர் கெளரி சங்கரி தவராசா தொடர்பில் பலரும் தமது உணர்வு பூர்வமான விடயங்களை பகிர்ந்துகொண்டனர்.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் நடந்து ஒரு வருடத்துக்கு பின்னர், தமிழீழ விடுதலை புலிகலின் அன்டன் பாலசிங்கத்துடன் ஒப்பீடு செய்து, தேசிய தெளஹீத் ஜமாத்தின் அன்டன் பாலசிங்கம் எனக்கூறி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உணர்வு பூர்வமாக விடயங்களை பகிர்ந்துகொண்டார்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது, 'கெளரி தவராசா தொடர்பில் நான் அறிந்தளவு யாரும் அறிந்திருப்பார்களா என நான் நினைக்கவில்லை. 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி என்னை சி.ஐ.டி.யினர் கைது செய்தார்கள். எமக்கு நெருக்கமானவர்கள், தெரிந்தவர்கள் எம்மைவிட்டு விலகியபோது, எனது குடும்பத்தாருக்கு சட்ட போராட்டத்துக்கான போராட்டத்தை ஆரம்பித்தவர் கெளரி சங்கரி தவராசா. குடும்பத்தாருடன் கூட பேச முடியாது நான் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அனைத்து தடைகளையும் தாண்டி, கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்து, சட்ட போராட்டத்துக்கு நம்பிக்கை அளித்தவர் அவர்.

கிட்டத்தட்ட எனது வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே சி.ஐ.டி.யினர் என்னை அச்சுறுத்தினர். தடுப்புக் காவலில் ஒன்றறை வருடம், வழக்கு விசாரணைக்கு 5 வருடம், தண்டனை 15 வருடம் என அவர்கள் என்னை பயமுறுத்தினர். அப்படியான நிலைமையில், குரலற்று இருந்த எனக்கு வாழ்க்கை குறித்து நம்பிக்கை அளித்து, சட்ட போராட்டத்தை ஆரம்பித்தவர் அமரர் கெளரி சங்கரி தவராசா. அவரது இழப்பு பேரிழப்பாகும்' என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment