(எம்.எப்.எம்.பஸீர்)
'ஒரு பொலிஸ் அதிகாரி என்ற ரீதியில் நான் நூற்றுக்கணக்கானோரைக் கைது செய்துள்ளேன். ஆனால் நான் கைது செய்யப்பட்டபோதே அதன் தாக்க நிலைமையை என்னால் உணர முடிந்தது. அவ்வாறான நிலையில், எனக்கிருந்த நிதிப் பிரச்சினை அனைத்தையும் தாண்டி, ஒரு சதம் கூட பெற்றுக் கொள்ளாமல் எனக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க போராடியவரே அமரர் கெளரி சங்கரி தவராசா' என சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்றுமுன்தினம் (1) வெள்ளவத்தை - குளோபல் டவர்ஸ் ஹோட்டலில் நடந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர இதனை வெளிப்படுத்தினார்.
இதன்போது ஷானி அபேசேகர மேலும் தெரிவித்ததாவது, '1989 ஆம் ஆண்டு நான் சி.ஐ.டி.யில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது கெளரி சங்கரி தவராசாவின் அறிமுகம் கிடைத்தது. அது முதல் நான் அவரை நன்கு அறிவேன். எனினும் ஒரு போதும் அவர் எனது கடமைகளுக்கு அழுத்தம் கொடுத்ததே இல்லை.
நான் கைது செய்யப்பட்டபோது, எனது மகளே நிதி விடயங்களை கையாண்டார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவீ செனவர்தனவின் அறிவித்தல் பிரகாரம் எனது மகள் கெளரி சங்கரி தவராசாவை சந்தித்திருந்தார்.
அதன் பின்னர் எனக்கு பிணை கிடைக்கும் வரையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், பிணை மனுக்கள் என அனைத்தையும் ஒரு சதம் கூட பெறாமல் தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்தவரே அமரர் கெளரி சங்கரி தவராசா. எனது பிணை பல காரணங்களால் பல தடைவைகள் நிராகரிக்கப்பட்டன. அப்போதெல்லாம், எனது மகளிடம் 'ஒன்றும் யோசிக்க வேண்டாம். அடுத்த தவணையில் பிணை கிடைக்கும்' என எனது குடும்பத்தாரையும் ஆறுதல் படுத்தியவர் அவர்.
பிணை கிடைத்ததும் நான் அவரை சந்தித்தேன். குறைந்த பட்சம் வழக்கு ஆவணங்களை பிரதி செய்யும் போது ஏற்படும் செலவினையேனும் பெற்றுக் கொள்ளுமாறு கோரினார். அவர் அதனைக் கூட ஏற்க மறுத்திவிட்டார். 'உங்களிடம் நான் கட்டணம் பெற்றால், அந்த பாவத்தை நான் எப்படி நிவர்த்திப்பேன் ' எனக் கேட்டவாறே அவர் அதனை நிராகரித்துவிட்டார்.
இன்றைய சூழலில், கெளரி தவராசா மிக அதிகளவில் உணரப்படுகின்றது. கெளரி தவராசாவைப் போன்ற நூற்றுக்கணக்கானக்கானவர்கள் இன்று நாட்டுக்கு தேவைப்படுகின்றார்கள்' என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment