(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் பணிப்பாளராக செயற்பட்ட சம்சுதீன் மொஹம்மட் யாசீன் மற்றும் கணக்காளர் மனோ ரஞ்சன் ஆகிய மூவரையும் கோட்டை நீதிவான் நீதிமன்றம் 05 ஆம் திகதி புதன்கிழமை பூரணமாக விடுதலை செய்து உத்தரவிட்டது.
நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தமை ஊடாக, நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்தே அம்மூவரையும் இவ்வாறு விடுவித்து கோட்டை நீதிவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த மூவருக்கும் எதிராக, அந்த விவகாரத்தில் வழக்கினை முன் கொண்டு செல்ல முடியாது என சட்டமா அதிபர், வழக்கு தொடர்பில் தனது நிலைப்பாட்டை கோட்டை நீதிமன்றுக்கு எழுத்து மூலம் அறிவித்த நிலையிலேயே 05 ஆம் திகதி நீதிமன்றம் அவரை விடுதலைச் செய்தது.
ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான இந்த விவகாரத்தில் விசாரணைகள் 2019.12.20 அன்று அக்மீமன தயாரத்ன தேரர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே சி.ஐ.டி.யினரால் ஆரம்பிக்கப்பட்டது .
நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு அழைத்து சென்றமை தொடர்பில் இவ்விசாரணைகள் இடம்பெற்றன.
அவ்விசாரணைகளில் ரிஷாத் பதியுதீன் கடந்த 2020 ஒக்டோபர் 19 ஆம் திகதி பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
அரசாங்கத்தினால், ரிஷாத் பதியுதீன் அப்போது வகித்த அமைச்சின் கீழ் இருந்த நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்துக்கு ஒதுக்கிய பணம் 95 இலட்சம் ரூபாவே இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் கேள்வி எழுபிய நிலையில், பதிவு செய்யப்படாத ஒரு அரச சார்பற்ற நிறுவனம், 2019.11.21 அன்று அந்த பணத்தை மீள செலுத்தியுள்ளதாக அப்போது சி.ஐ.டி.யினர் தெரிவித்திருந்தனர். .
அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சின் செயலர் ஊடாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவே அனுமதியளித்திருந்த நிலையில், சட்டத்துக்கு உட்பட்டே நடவடிக்கைகள் இடம்பெர்றதாக ரிஷாத் உள்ளிட்ட கைதான மூவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான அனில் சில்வா, அனுஜ பிரேமரத்ன, கே.வி. தவராசா சிரேஷ்ட சட்டத்தர ணி களான ருஷ்தி ஹபீப், எம்.என். சஹீட் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் மன்றில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில், 05 ஆம் திகதி (50 குறித்த அவ்ழக்கு விசாரணைக்கு வந்த போது ரிஷாத் உள்ளிட்ட மூவர் சார்பிலும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மன்றில் ஆஜரானார். இந்நிலையிலேயே நீதிமன்றம் சட்ட மா அதிபரின் எழுத்து மூல தீர்மானத்தை மையப்படுத்தி மூவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தது.
No comments:
Post a Comment