இலங்கைத் தீவுகள் அபிவிருத்தி அதிகார சபை என்ற புதிய நிறுவனம் நிறுவப்படவுள்ளது. நாடெங்கிலும் அமைந்துள்ள தீவுக் கூட்டத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய அதிகார சபை ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தீவு அபிவிருத்தி அதிகார சபையை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நம் நாட்டைச் சுற்றி 60 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இந்தத் தீவுக் கூட்டத்தை அபிவிருத்தி செய்து சுற்றுலாத் துறையைக் கவர்வதன் மூலம் இந்நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உலகின் பல நாடுகளில் அமைந்துள்ள தீவுகளின் பொருளாதார வாய்ப்புகள் மதிப்பீடு செய்யப்பட்ட போதிலும் இலங்கையைச் சூழவுள்ள சிறிய தீவுகளின் பொருளாதார வாய்ப்புகள் இதுவரை சரியாக மதிப்பிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாலைதீவு போன்ற தீவு நாடுகளில் இயங்கும் நீர் பங்களாக்கள் போன்ற ஹோட்டல்களை நிர்மாணிப்பதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு அதிகரிக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
எனவே அந்தத் தீவுகளின் பௌதீக மற்றும் சமூக உட்கட்டமைப்புகள் முறையான திட்டத்தின்படி அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.
ஆனால் எமது நாட்டில் இதுவரையில் அவ்வாறான வேலைத் திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நமது நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. எனவே, நாட்டைச் சூழவுள்ள தீவுகளை அபிவிருத்தி செய்து பொருளாதாரத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதன் மூலம் அந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment