ஊழல் மோசடிகளை மறைக்கவே கோப், கோபா குழுக்களுக்கு அதிகளவான பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பரிந்துரை - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 5, 2022

ஊழல் மோசடிகளை மறைக்கவே கோப், கோபா குழுக்களுக்கு அதிகளவான பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பரிந்துரை - தயாசிறி ஜயசேகர

(எம்.மனோசித்ரா)

ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலும் அரசாங்கம் அதன் மோசடிகளை மறைப்பதற்காக கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு அதிகளவான பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் பெயர்களைப் பரிந்துரைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை (5) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் செனட் சபையில் ராஜபக்ஷாக்களின் ஊழல் மோசடிகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியமும் இலங்கையில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.

இவை தொடர்பில் சர்வதேசத்தில் மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது போதுமானதல்ல. ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இதற்கு முன்னர் கோப் மற்றும் கோபா குழுக்கள் சிறப்பாக செயற்பட்டு வந்தன. பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் ஏனைய உறுப்பினர்களால் பல மோசடிகள் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில் எந்தவொரு அடிப்படை காரணமும் இன்றி அவர்களைப் போன்றவர்களும், ஏனைய அங்கத்தவர்களும் குழுக்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் ஈடுபடும் ஊழல், மோசடிகளிலிருந்து தப்பிக் கொள்வதற்காகவும், அவற்றை இலகுவாக முன்னெடுத்துச் செல்வதற்கும் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு பெருமளவான பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மீண்டும் இவ்வாறு ஊழல், மோசடிகள் தொடருமாயின் இலங்கை ஒரு போதும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றமடையாது என்றார்.

No comments:

Post a Comment