(எம்.வை.எம்.சியாம்)
நாளை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால்மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
பால்மா உற்பத்தி தொடர்பான உற்பத்தி செலவுகள் அதிகரித்தமை காரணமாகவே தற்போது உள்ளூர் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ தனியார் நிறுவனத்தின் தலைவர் ரெனுக பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க மில்கோ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைவாக, 400 கிராம் உள்ளூர் பால்மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரூபா 850 விற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 400 கிராம் பால்மா பொதி 950 ரூபாவாக விற்பனை செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோ பால்மா பொதி ஒன்றின் விலை 230 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக ரூபா 2,120 விற்பனை செய்யப்பட்டு வந்த பால்மா பொதி தற்போது 2,350 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 400 கிராம் ஆடையில்லா பால்மா பொதியின் விலை 210 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 975 லிருந்து 1,050 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பால்மா உற்பத்தியை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு தற்போது உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
மேலும் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.
பால் உற்பத்தி தற்போது பாரிய அளவில் குறைந்துள்ளது. அதேபோன்று பால் உற்பத்தி தொடர்பான உற்பத்தி செலவுகளும் அதிகரித்து காணப்படுகிறது.
பால்மா உற்பத்தியை அதிகரிப்பதற்கு அதிகரித்த தீர்வைக் கட்டணங்கள் மிகப் பிரதான காரணமாகும்.
மேலும், கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனங்கள் சடுதியான விலை அதிகரிப்புகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பால்மா உற்பத்திகள் மேற்கொள்ளும் போது பல்வேறு பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளன. மின்சார கட்டணம் உயர்வு, அதிகரித்த எரிபொருள் விலை காரணமாக போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
மேலும் தொழிற்சாலைகளில் மேலதிகமாக எழும் செலவுகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நிறுவனம் என்ற ரீதியில் நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிகரித்த உற்பத்தி செலவுகள் மூலம் நிறுவனத்தை நடத்தி செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment