பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி அப்பாவிகளை கைது செய்வதை நிறுத்துங்கள் : இது முட்டாள்த்தனமான அரசாங்கம் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 6, 2022

பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி அப்பாவிகளை கைது செய்வதை நிறுத்துங்கள் : இது முட்டாள்த்தனமான அரசாங்கம் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களின் அமைதியான போராட்டத்தை தடுத்து, ஜெனிவாவில் எமது நாட்டுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர ஊக்குவித்து வருகின்றது. அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி, அப்பாவிகளை கைது செய்வதை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (ஒக் 5) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் வசந்த முதலிகே உட்பட 3 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தங்கல்லையில் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது 48 நாட்கள் ஆகின்றன. தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு அவர்கள் செய்த தவறு என்ன?

அத்துடன் வசந்த முதலிகே இரவு நேரங்களில் கம்பஹா, மல்வானை என பல்வேறு பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அறியக் கிடைக்கின்றது.

இரவு நேரத்தில் ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? பகல் நேரத்தில் கொண்டு செல்ல முடியாதா? இவ்வாறு இரவு நேரத்தில் அழைத்துச் சென்று ஏதாவது விபரீதங்கள் இடம்பெற்ற பின்னர், அல்லது திட்டமிட்டு அவரை கொலை செய்து, அவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவிப்பீர்கள். அதனால் இது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் அரச விரோத குற்றத்துக்காகவே இவர்களை கொழும்பு கேஸ்பார்க் சந்தியில் இருந்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டி, ஆர்ப்பாட்டம் செய்ய, ஊர்வலம் செல்ல, இந்த நாட்டில் உரிமை இல்லையா?

நாங்கள் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்கப் போவதில்லை. இவர்களுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரம் தயாரிக்கவில்லை. இது மிகவும் பயங்கரமான நிலைமை.

ஜெனிவாவில் மனித உரிமைகள் தொடர்பில் பேசப்பட்டு வரும்போது இவ்வாறான விடயங்கள் நிலவுவது பொருத்தமா? ஜெனிவாவில் எமது நாட்டுக்கு எதிராக மேலும் பிரேரணைகளை கொண்டுவரவா முயற்சிக்கின்றீர்கள்?

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக தெரிவித்துக் கொண்டு, இவ்வாறு மாணவர்களை தடுத்து வைப்பது சரியா என கேட்கின்றேன்.

உண்மையில் இங்கு இடம்பெறுவது அரச பயங்கரவாதமாகும். மிலேச்சத்தனமாகும். மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது. இது முட்டாள்த்தனமான அரசாங்கம்.

மாணவர்கள் வெளியில் வந்து, அவர்களின் கருத்தை தெரிவிக்கும்போது, அவர்களை அடக்குவதற்கு முயற்சிக்கின்றனர். அரசாங்கத்தின் இந்த செயற்பாடு, நாங்களே எமக்கு எதிராக மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவர உதவி செய்வது போலாகும்.

எமது நாட்டுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அரசாங்கம் எமது நாட்டுக்கு எதிராக செயற்பட மனித உரிமை பேரவையை ஊக்குவிக்கின்றது.

அத்துடன் பயங்கரவாதத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் இருக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கொழும்பு கேஸ்பார்க் சந்தியில் குண்டு வெடிக்கவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரளவின் கொலையை பயங்கரவாத செயல் என நான் ஏற்றுக் கொள்கின்றேன். பயங்கரவாதிகள், கொலையாளிகளை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

அதேபோன்று பல்கலைக்கழக பகிடிவதைக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். ஆனால், பயங்கரவாத தடைச் சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம்.

எனவே, ஜனாதிபதியுடன் கலந்துரையாடி கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாணவர்களை விடுதலை செய்து, விசாரணை மேற்கொள்ளுங்கள் என்றார்.

No comments:

Post a Comment