சட்டக் கல்லூரியில் தமிழ், சிங்கள மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது : வர்த்தமானியை மீள் பரிசீலனை செய்யுமாறு ஆலோசனை கோரப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, October 3, 2022

சட்டக் கல்லூரியில் தமிழ், சிங்கள மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது : வர்த்தமானியை மீள் பரிசீலனை செய்யுமாறு ஆலோசனை கோரப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

சட்டக்கல்லூரி மாணவர்கள் 2023ஆம் ஆண்டுக்கு பிறகு ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்று வெளியிட்டுள்ள வர்த்தமானியை மீள் பரிசீலனை செய்ய ஆலோசனை கோரப்பட்டுள்ளது. தமிழ், சிங்கள மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ், சிங்களம் அரசகரும மொழியாக உள்ள நிலையில் சட்ட கல்லூரியில் ஆங்கில மொழிக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கியுள்ளமை அரசியலமைப்புக்கு முரணானதாகும் என பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் குறிப்பிட்டனர்.

சபாநாயகர் தலைமையில் திங்கட்கிழமை (03) பாராளுமன்ற அமர்வில் வாய் மூல விடைக்கான வினாக்களின் போது எதிர்த்தரப்பின் உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது சிங்களம் மற்றும் தமிழ் மாணவர்கள் தங்களின் தாய்மொழியில் சட்ட பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய உரிமையுண்டு, வெளிநாட்டில் ஆங்கில மொழியில் சட்ட படிப்பை பூர்த்தி செய்த ஒருவர் சட்டத் தொழிற்துறையில் ஈடுப்படுவதற்கும், சிங்களம் அல்லது தமிழ் மொழியில் சட்ட தொழிற்துறையில் ஈடுபடுபவர்களுக்கும் தொழிற்துறை ரீதியில் ஒரு சில சிக்கல் காணப்படுகிறது.

சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் தோற்றும் வகையிலான வர்த்தமானி 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இத்தீர்மானத்திற்கு சமூக மட்டத்தில் எதிர்ப்பு தோற்றம் பெற்றதை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அத்தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டு, மாணவர்கள் தமது தாய்மொழியில் பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு பின்னர் சட்டக் கல்லூரியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பரீட்சைகளுக்கு ஆங்கில மொழியில் மாத்திரம் தோற்ற வேண்டும் என விசேட வர்த்தமானி கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இத்தீர்மானம் தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடளித்துள்ளார்கள்.

வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதம நீதியரசரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை மீள் பரிசீலனை செய்ய ஆலோசனை கோரப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தமிழ் மற்றும் சிங்கள மொழி இந்த நாட்டின் அரச கரும மொழிகளாகும், ஆங்கில மொழி தொடர்பு மொழியாகும்.

இந்நாட்டு மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் சட்டக் கல்லூரி பரீட்சையை தோற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளமை அரசியலமைப்புக்கு முரணானதாகும். உயர் வர்க்கத்தின் தேவைக்கமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய முன்னாள் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஒரு பிள்ளை தமது ஆரம்ப கல்வியை தமது தாய்மொழியில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற யுனெஸ்கோ நிறுவனத்தின் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தமது தாய்மொழியில் பட்டபடிப்பை தொடர உரிமையுண்டு, அதற்கு தடையேற்படுமாயின் அது அடிப்படை உரிமை மீறலாகும். இவ்விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயகாரவின் கூற்றுக்கு உடன்படுகிறேன் என்றார்.

No comments:

Post a Comment