ஜனாதிபதியின் நண்பர் சம்பந்தப்பட்டாலும் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்காது - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, October 3, 2022

ஜனாதிபதியின் நண்பர் சம்பந்தப்பட்டாலும் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்காது - செஹான் சேமசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

பிணைமுறி மோசடியுடன் ஜனாதிபதியின் நண்பரே சம்பந்தப்பட்டிருந்தாலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (3) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி எம்பி எழுப்பிய கேள்வி க்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பிணைமுறி மோசடி உட்பட நல்லாட்சி அரசாங்க காலம் உட்பட அனைத்து சந்தர்ப்பங்களிலும் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.

அதற்காக எவரும் அழுத்தம் கொடுக்க முடியாது. எனினும் அதற்கான நடவடிக்கைகள் இயல்பாகவே நடைபெறுகின்றன.

குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை தொடர்பான உண்மையான தகவல்கள் உரிய நேரத்தில் கிடைக்காமையே விசாரணை நடவடிக்கைகள் சற்று தாமதமாக காரணமாகியது. கடந்த அரசாங்க காலத்தில் இந்த விசாரணைகளின் போது அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

என்றாலும் பிணைமுறை மோசடி உட்பட அனைத்து மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை. இந்த மோசடிகளில் ஜனாதிபதியின் நண்பரே சம்பந்தப்பட்டிருந்தாலும் விசாரணைகள் எந்தவித பாரபட்சமும் இன்றி முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment