ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் எப்போதும் பொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது - அகிலவிராஜ் காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 3, 2022

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் எப்போதும் பொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது - அகிலவிராஜ் காரியவசம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் எப்போதும் பொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த நிலைமையை ஏற்படுத்துவதற்கே ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நாட்டின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மக்களுக்கு வாழ முடியாத அளவுக்கு பொருட்களின் விலை அதிகரித்திருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாட்டை நிர்வகிக்க பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க முன்வந்தார். என்றாலும் ஆரம்பத்தில் இருந்த நிலையைவிட தற்போது ஓரளவு மகிழ்ச்சியடைய முடியுமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக பொருட்களின் தட்டுப்பாடு குறைவடைந்துள்ளது. எரிபொருள், சமையல் எரிவாயு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்திருக்கின்றது. அதேபோன்று எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நாட்டின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் கொள்கையுடன் செயற்பட்ட கட்சியாகும். தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் எமது கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வந்தோம். ஆனால் இறுதியில் எமது நிலைப்பாடு சரி என அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

அதேபோன்று நாங்கள் வரி அதிகரித்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வரி அதிகரிப்பின் மூலம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம். எமது வரிக் கொள்கையை மாற்றியதால், அதனால் ஏற்பட்ட பாதிப்பை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

அதனால் நாட்டை நிர்வகிக்கும் தலைவர் நிலையான கொள்கையுடன் நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியுமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் பாதிப்பு மக்களுக்கே ஏற்படும். அதனால் ஜனாதிபதி தற்போது உறுதியான கொள்கையுடன் நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஏனெனில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஒரு உறுப்பினரே இருக்கின்றார். அதனால் தற்போது அவருக்கு ஆதரவளிப்பவர்களை வைத்துக் கொண்டு இந்த பயணத்தை செல்ல வேண்டி இருக்கின்றது.

மேலும் 2015 இல் நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு பாரியளவில் நிவாரணங்களை வழங்கினோம். எரிபொருள், மண்ணெண்ணெய், நிவாரணம் வழங்கினோம். அரச ஊழியர்களுக்கு வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு சம்பளம் அதிகரித்தோம்.

வரி அதிகரித்தாலும் பணம் படைத்தவர்களிடமிருந்தே அதனை பெற்றுக் கொண்டோம். அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்தோம். நாட்டின் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். அதனால் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க படிப்படியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சி செய்த எந்த காலத்திலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி இருக்கின்றது. பொருட்களின் விலை குறைக்கப்பட்டிருக்கின்றது. அதனையே தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றார். என்றாலும் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு சிறிது காலம் செல்லும் என்றார்.

No comments:

Post a Comment