(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொள்ளவில்லை. அடுத்த பாராளுமன்ற அமர்வு வரை அது ஒத்து வைக்கப்பட்டிருக்கின்றது. அனைத்து தரப்பினரதும் ஏகமனதான இணக்கப்பாட்டுடனேயே அதனை ஒத்தி வைத்துள்ளோம். அத்துடன் பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை என பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி நாடு தொடர்பில் கவனம் செலுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது நாடு என்ற வகையில் அனைவரும் இணைந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நீதிமன்றத்தை பாதுகாக்காமல் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது அந்த வகையில் ஓடி ஒளிந்து பயப்படாமல் நாட்டுக்காக ஒன்றிணைந்து செயல்பட முன் வாருங்கள் என நான் எதிர்க்கட்சியிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து பொறுப்புக்களை ஏற்காமல் ஓடி ஒளிந்தவர்கள் யார் என்று எமக்குத் தெரியும். அதில் செயல்பட்டவர்கள் தற்போது எங்கே என்றே தெரியாமல் உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு நல்லவற்றை போதிக்க வேண்டிய பேராசிரியர்களும் விரிவுரையாளர்களுமே மாணவர்கள் மத்தியில் குரோதத்தை விதைத்தனர். தாக்குதல் நடத்துங்கள், தீ வையுங்கள் என்று அவர்களுக்கு போதனைகளை வழங்கினர்.
நாட்டின் நெருக்கடி நிலையைப் பார்த்து சிலர் மகிழ்ச்சி கொண்டாடுகின்றனர். எம் மீது குற்றஞ்சாட்டுபவர்கள் தொடர்பில் எம்மாலும் பலவற்றை கூற முடியும். ஆனால் இது அதற்கான நேரம் அல்ல.
நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகும்.
அத்துடன் பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை. ஆனால் அவரை அனாதையாக்கியது ஐக்கிய மக்கள் சக்தியாகும் .
மேலும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொள்ளவில்லை. அடுத்த பாராளுமன்ற அமர்வு வரை அது ஒத்து வைக்கப்பட்டிருக்கின்றது. அனைத்து தரப்பினரதும் ஏகமனதான இணக்கப்பாட்டுடனேயே அதனை ஒத்திவைத்துள்ளோம் .
அத்துடன் எதிர்க்கட்சி கூறுவதையெல்லாம் அரசாங்கத்தினால் செய்ய முடியாது . ஒவ்வொருவரும் தனித்தனி அரசியல் நோக்கங்களுக்காக செயல்பட்டு அரசியலமைப்பு திருத்தத்தை கேலிக்குள்ளாக்கக்கூடாது என்றார்.
No comments:
Post a Comment