நாட்டில் அரசியலமைப்பு பிரச்சினை கிடையாது. ஊழல் அரசியல்வாதிகளே பிரதான பிரச்சினையாக உள்ளார்கள். அரசியலமைப்பு திருத்தத்தினால் அரசியல்வாதிகள் பயன் பெறுகிறார்கள் ஆனால் நாடு முன்னேறவில்லை. பாராளுமன்றில் பெரும்பாலானோர் ஊழல் மோசடியுடன் தொடர்புப்பட்டுள்ளார்கள். ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள் ஒன்றினைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களுக்கு புனர்வாழ்வு வழங்க முன்னர் அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு புனருத்தாபனம் வழங்க வேண்டும். ஜனநாயகத்துக்கு எதிரான அடக்குமுறையை அரசாங்கமும், பொலிஸாரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு மீதான விவாதம் இன்று இடம்பெறும் என குறிப்பிடப்பட்ட போதும் அது இடம்பெறவில்லை. மாறாக கவனத்தை திசைத்திருப்பும் வகையில் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தந்து உரையாற்றி சென்றுள்ளார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்த உருவாக்கத்தை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் பிற்போடுகிறது. ஆகவே அரசியலமைப்பு திருத்தம் வெறும் பகல் கனவாகவே உள்ளது. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கங்களும் தமக்கு ஏற்றாட் போல் அரசியலமைப்பை திருத்தம் செய்துக் கொள்கின்றன.
ஜனாதிபதியின் அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு வழங்குதாலும், பாராளுமன்றத்தின் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதாலும் நாட்டு மக்கள் பயன் பெறவில்லை. காலம் காலமாக அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது, ஆனால் நாடு ஒரே இடத்தில் உள்ளது.
நாட்டில் அரசியலமைப்பு பிரச்சினையில்லை. ஊழல் அரசியல்வாதிகளே நாட்டுக்கு பிரதான பிரச்சினையாகவே உள்ளனர். எழுதப்படாத அரசியலமைப்பை கொண்டுள்ள பிரித்தானியாவில் ஊழல் அரசியல்வாதிகள் இல்லாத காரணத்தால் அந்த நாடு முன்னேற்றமடைந்துள்ளது, அந்நாட்டு மக்களும் மகிழ்வுடன் உள்ளார்கள்.
ஊழல் அரசியல் முறைமையை இல்லாதொழிக்க எவரும் அவதானம் செலுத்தவில்லை. நாட்டு மக்களை ஏழ்மையில் வைத்துக் கொண்டு தொடர்ந்து அரசியல் செய்யவே பெரும்பாலான தரப்பினர் அவதானம் செலுத்தி சமுர்த்தி பயனாளர்களை பல இலட்சமாக அதிகரித்துக் கொள்கிறார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஊழல்வாதிகளாகவே உள்ளார்கள்.
நாட்டு மக்களின் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்துவதை காட்டிலும் பாராளுமன்றில் அமைச்சர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஊழல் அரசியல்வாதிகளை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு புனருத்தாபனம் வழங்க வேண்டும் என ஆளும் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
புனருத்தாபனம் வழங்க வேண்டுமாயின் முதலில் பாராளுமன்றில் உள்ள அரச நிதி மோசடியாளர்களுக்கு புனருத்தாபனம் வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு எதிரான அடக்குமுறையை அரசாங்கம் நிறுத்த வேண்டும், இல்லாவிடின் என்றாவது அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment