(இராஜதுரை ஹஷான், எம்,ஆர்.எம்.வசீம்)
எதிர்க்கட்சியாக செயற்படுவதாக இருந்தால் அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்காமல் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுங்கள் என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவை நோக்கி குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் வசிக்கிறார்கள். கொழும்பில் எனக்கு வீடு வழங்கினால் மறுகணமே அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவேன் என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
வலுத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டதாவது, எரிபொருள் இறக்குமதியில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்திக் கொண்டு குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்காமல், உரிய ஆதாரங்கள் இருக்குமாயின் உரிய விசாரணை நிறுவனங்களில் முறைப்பாடளிக்கலாம்.
அமைச்சராக பதவியேற்ற காலத்திலிருந்து இன்று வரை எரிபொருள் இறக்குமதியில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட வேண்டும். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அரச நிதி மோசடி செய்யப்படுவதாக இவர் குறிப்பிடுகிறார். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சுப் பதவியில் இருந்து விலகினார், ஆனால் இன்றும் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் உள்ளார். அரச நிதி மோசடி தொடர்பில் கருத்துரைக்க முன்னர் முதலில் அரச இல்லத்தை கையளித்து வெளியேறுங்கள் என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டதாவது, நான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்தாலும், மாதாந்த மின் மற்றும் நீர்க் கட்டணத்தை செலுத்தியுள்ளேன். கொழும்பில் எனக்கு வீடு இல்லை ஆகவே வீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்றும் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வசிக்கிறார்கள். எனக்கு கொழும்பில் இல்லம் வழங்கினால் மறுகணமே அரசாங்க இல்லத்தில் இருந்து வெளியேறுவேன் என்றார்.
No comments:
Post a Comment