யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் அறையில் வைக்கப்பட்டிருந்த பெற்றோலில் தீ பற்றியதால், தூக்கத்தில் இருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று 01 ஆம் திகதி அதிகாலை 4.15 மணியளவில் பதிவாகியுள்ளது.
அறையில் வைக்கப்பட்டிருந்த பெற்றோலில் தீ பற்றியதாலேயே இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டனர்.
தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணையில் அறையில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை மற்றும் பெற்றொல் பரவியமை தொடர்பில் கண்டறியப்பட்டன. அத்துடன் உயிரிழந்த மனைவியின் கையில் அலைபேசி சார்ஜர் வயர் இருந்துள்ளமை மீட்கப்பட்டது.
கணவனின் அலைபேசி கொழும்பில் தவறவிடப்பட்டுள்ளது. அதனால் அவர் சீனாவின் தயாரிப்பிலான அலைபேசி ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
அந்த அலைபேசி வெப்பமாகி அல்லது சார்ஜர் வெப்பமாகி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படுக்கை அறையில் பெரிய கேனிலும் மற்றும் போத்தலிலும் பெற்றோல் சேமித்து வைக்கப்பட்டிருந்துள்ளன என்று தடயவியல் விசாரணையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment