(இராஜதுரை ஹஷான்)
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே உட்பட மூவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று மாலை (4) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், சிவில் அமைப்பினர் மற்றும் சமூக சேவை அமைப்பினர் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்த பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியை இடைமறித்து களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் சிவில் அமைப்பினர் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஒடுக்கு முறையை நிறுத்து, சிறைப்பிடித்தாலும் நாங்கள் முன்னேறி வருவோம், துப்பாக்கிப் பிரயோகம் செய்தாலும் நாம் வருவோம், ரணில் அரசாங்கம் எமக்கு வேண்டாம், மக்களாணையை பெற உடன் தேர்தலை நடத்து' என கோசம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஒரு மாதத்துக்கு மேலதிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே உட்பட மூவரை விடுதலை செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும், சிவில் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்ப்பு கோசங்களை எழுப்பிய வண்ணம் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி பொலிஸார் பொதுப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என ஒலிவாங்கி ஊடாக அறிவித்தனர்.
இருப்பினும் அதனை பொருட்படுத்தாது போராட்டக்காரர்கள் முன்னோக்கிச் சென்ற நிலையில் பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் ஆகியவற்றை மேற்கொண்டனர்.
கண்ணீர்ப்புகைப் பிரயோகிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கூச்சலிட்டு பொலிஸாருக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கண்ணீர்ப்புகை வீச்சு பிரயோகித்ததால் போராட்டக்காரர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளானதை அவதானிக்க முடிந்தது.
No comments:
Post a Comment