(இராஜதுரை ஹஷான், எம்.ஆர், எம்.வசீம்)
அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 35 உறுப்பினர்களில் அறிவார்ந்த பெரும்பாலானோர் கோப் குழுவுக்கு நியமிக்கப்படவில்லை. குறுகிய அரசியல் நோக்கத்துக்கான எமது பாராளுமன்ற உரிமை மறுக்கப்படுகிறது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது கோப் குழுவுக்கு சுயாதீன தரப்பினரின் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமை குறித்து விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலான தரப்பினர்கள் பாராளுமன்ற தெரிவுக் குழுக்களுக்கு நியமிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் குறைபாடுகளை பகிரங்கப்படுத்துவதால் எமது பாராளுமன்ற உரிமை மறுக்கப்படுகிறது.
சுயாதீன உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, திஸ்ஸ விதாரன, ரத்ன தேரர் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் கடந்த கோப் குழுவின் உறுப்பினர்களாக அங்கம் வகித்தார்கள். சுயாதீன தரப்பினர்களின் அறிவார்ந்த பெரும்பாலானோர் கோப் மற்றும் கோபா குழுக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த 18 வருட காலமாக கோப் மற்றும் கோபா குழுக்களின் உறுப்பினராக பதவி வகித்துள்ளேன். எந்நிலையிலும் ஊழல் மோசடியாளர்களுக்கு துணைபோகவில்லை. அரச நிறுவனங்களின் பல மோசடிகளை அறிக்கையிட பொறுப்புடன் செயற்பட்டுள்ளேன்.
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 35 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கோப் குழுவுக்கு நியமிக்கப்படவில்லை. எமது அரசியல் மற்றும் பாராளுமன்ற உரிமை திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment