சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி வீதத்தை இல்லாதொழிப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 4, 2022

சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி வீதத்தை இல்லாதொழிப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை - செஹான் சேமசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் குறுகிய கால வரி மறுசீரமைப்பு நாட்டு மக்களின் மத்திய கால மற்றும் நீண்ட கால நன்மைகளுக்கு வழிவகுக்கும். அத்துடன் சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி வீதத்தை இல்லாதொழிப்பதாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்ற போதிலும் அதில் எந்தவித உண்மையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் மக்களின் நலன்புரி செயற்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த ஆலோசனையையும் அந்த நிதியம் முன்வைக்கவில்லை.

பல்வேறு விஷமப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் வருமானத்தை அதிகரித்துக் கொள்வது தொடர்பான செயல்பாடுகளிலேயே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் எமக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. மோசமான பொருளாதார நிலைமையை மீள கட்டியெழுப்ப வேண்டியது முக்கிய பொறுப்பு எமக்கு உள்ளது. அதற்கு வரி மறுசீரமைப்பு அவசியமானது.

அரசாங்கம் மாதாந்தம் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் சமுர்த்தி உதவிகள் உள்ளிட்ட நலன்புரி விடயங்களுக்காக 120 பில்லியன் டொலர்களை செலவிட்டு வருகிறது. அதற்கான நிதியை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எனினும் அரசியல் லாபத்திற்காக மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15 வீத வட்டியை இல்லாது ஒழிக்க அரசு நடவடிக்கை எடுப்பதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

உண்மையில் தற்போது நடைமுறையில் உள்ள அதிக வட்டியினை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே குறைந்த வட்டியான 15 வீதம் இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போகும் என்ற சிறந்த நோக்கத்துடனே அத்தகைய மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் அதனை சிலர் அரசியல் லாபத்திற்கான விமர்சனங்களாக முன்னெடுக்கின்றனர்.

சர்வதேச நாணய நிதித்துடனான இணக்கப்பாடு எப்போது எட்டப்படும் என கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இரு தரப்பு கடன் வழங்குனர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி எமது திட்டத்தை நாம் சமர்ப்பிப்போம். அதன் பின்னரே அதற்கான இணக்கப்பாடு எட்டப்படும். எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் .

ஜனாதிபதியும் மத்திய வங்கியும் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன் பல நாடுகளுடன் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனறார்.

No comments:

Post a Comment