சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் நாட்டின் பல்வேறு தொழிற்துறைகளுக்கு பாதிப்பு - எச்சரிக்கிறார் விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 4, 2022

சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் நாட்டின் பல்வேறு தொழிற்துறைகளுக்கு பாதிப்பு - எச்சரிக்கிறார் விஜித ஹேரத்

சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி எம்பி விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் நாட்டின் பல்வேறு தொழில்துறைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்த உடன்படிக்கையின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சின் வரிச் சலுகைகள் மற்றும் சில வரிச் சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சில நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கியுள்ள அரசாங்கம் முதியோர் தினத்தன்று வங்கிகளில் முதியோர்களின் வைப்புக்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட 15வீத வட்டியை முழுமையாக இல்லாமல் செய்துள்ளது.

முதியோர் தினத்தில் அவர்களுக்கு வழங்கிய பரிசைப் போன்றே இது உள்ளது. அவர்கள் தமக்குத் தேவையான மருந்துகளை வாங்குவதற்குக்கூட முடியாத நிலையில் வாழ்கின்றனர்.

கம்பனிகளுக்கு வரிச்சலுகைகளை வழங்கி தங்களின் சொந்தப் பணத்தை வங்கிகளில் வைத்திருக்கும் முதியோருக்கு இவ்வாறான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வங்கி வட்டி வீதத்தில் மாற்றங்களை மேற்கொண்டமையினால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறிய மற்றும் மத்திய தொழில்துறையினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அநீதியானது. 

அதேவேளை ஊழல் மோசடிகளை நிறுத்தினால் மாத்திரமே முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள். முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் எப்படியிருந்தாலும் பிரச்சினையில்லை. அவர்களுக்கு முதலில் மோசடிகளற்ற அரசாங்கமாக முக்கியமானது.

அதேவேளை சீனாவுடன் செய்யவுள்ள வர்த்தக உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன என்று அறிந்துகொள்ள வேண்டும்.

அதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அதனை செய்யாது கையெழுத்திட்டால் இந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களால் பல்வேறு துறைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற சந்தேகங்கள் உள்ளன.

அதன் உள்ளடக்கம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அதன் வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment