ஜனாதிபதி ரணிலிடம் அனுபவமும், அறிவும் இருப்பதன் காரணமாகவே நாம் ஆதரிக்க தீர்மானித்தோம் - ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Monday, October 3, 2022

ஜனாதிபதி ரணிலிடம் அனுபவமும், அறிவும் இருப்பதன் காரணமாகவே நாம் ஆதரிக்க தீர்மானித்தோம் - ஜீவன் தொண்டமான்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள எமது நாட்டை முன்னேற்றிச் செல்லக்கூடிய அனுபவமும், அறிவும் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருப்பதன் காரணமாகவே அவரின் தலைமையிலான அரசாங்கத்தை நாம் ஆதரிப்பதற்கு தீர்மானித்தாக இ.தொ.க.வின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடு தற்போது முகங்கொடுத்து வரும் நெருக்கடிமிக்க சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்களை எந்தவொரு அரசியல்வாதியும் துணிந்து எடுக்க மாட்டார்கள். அவர் தற்போது முன்னெடுக்கும் விடயங்களை பொறுத்தமட்டில் அவருக்கு தேர்தலில் வாக்குகள் கிடைக்காமல் போகலாம். இவ்வாறு வாக்குகள் கிடைக்காமல் போகும் என்ற காரணத்தினாலேயே எதிர்கட்சிகள் அரசாங்கத்தை பொறுப்பேற்க பின்வாங்கி நிற்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இ.தொ.க.வின் தலைமையமான செளமிய பவனில் திங்கட்கிழமை (03) பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "நாட்டில் ரணிலுக்கு விக்கிரமசிங்கவுக்கு நல்ல பெயர் இருக்கிறதா அல்லது கெட்ட பெயர் இருக்கிறதா என்பது முக்கியமில்லை. எதிர்கால தேர்தல்களை கருத்திற் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை பொறுப்பேற்க தயங்கிய சூழ்நிலையில், ரணில் விக்கிரமசிங்க துணிவுடன் அரசாங்கத்தை பொறுப்பேற்றார்.

2003 ஆம் ஆண்டிலும் இதுமாதிரியான பொருளாதார நெருக்கடி காணப்பட்டபோது, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டார். ஆகவே, அவரின் அனுபவம் மற்றும் அறிவு ஆகியவற்றின் காரணமாகவே அவரை நாம் ஆதரித்தோமே தவிர வேறேந்த காரணங்களுக்காகவும் நாம் அவரை ஆதரிக்கவில்லை.

எதிர்காலத்தில் நாம் அரசாங்கத்துடன் சேர்ந்தால் கூட மலையக மக்களின் தனித்துவமான கட்சியாக செயற்படுவோமே தவிர, ஐக்கிய தேசிய கட்சியின் கீழோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழோ செயற்பட மாட்டோம். சுயாதீனமாக முடிவெடுப்போம். இவ்வாறு சுயாதீனமாக செயற்படும்போது எது சரி, எது தவறு என்பதை வெளிப்படையாக பேச முடியும்.

கட்சி ரீதியான அரசியலை ஒரு பக்கத்தில் வைத்துக் கொள்வோம். ஆனால், தற்போது இருக்கும் நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியாகட்டும், பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படும் மலையகத்தின் ஏனைய கட்சிகளாகட்டும் அரசாங்கத்தில் இணைவதோ அமைச்சரவை அந்தஸ்த‍ை பெறுவதோ பிரச்சினை இல்லை. மலையகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற பிரதிநிதிகள் அதிகமாக இருந்தால் மலையக மக்களுக்கு நன்மையாகும். இதனை நான் எதுவித இனவாத அடிப்படையிலும் கூறவில்லை.

நாங்கள் 30 வருடங்கள் பின்தங்கியிருக்கிறோம். போட்டியை தாமதமாகவே ஆரம்பித்துள்ளோம். ஆகவே, நாம் வேகமாக ஓட வேண்டியுள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் எமக்கு கிடைத்த வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும். அதிகளவான அமைச்சுப் பொறுப்புகளாகட்டும் அதிகளவான வரப்பிரசாதங்களாகட்டும் அவற்றை பயன்படுத்தி மக்களுக்கு நன்மைகள‍ை செய்ய வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment