ஏப்ரல் 21 குண்டுத் தாக்குல்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச விசாரணை நிறுவனங்களின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார். ஒவ்வொருவர் மனதில் உள்ளவர்களுக்கு எதிராக செயற்பட முடியாது. நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாகவே தண்டனை வழங்க முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பாராளுமன்றில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான சமிந்த விஜேயசிறி மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் விசாரணை அறிக்கையினை மறைப்பதற்கும், குற்றவாளிகளை பாதுகாப்பதற்கும் வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்கு 66 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் ஆணைக்குழுவின் ஒரு சில விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கத்தை செயற்படுத்துவதற்காக அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது. உப குழுவின் பரிந்துரைக்கமைய அறிக்கையின் பல விடயங்கள் தற்போதும் நிறுவன மட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய தரப்பினர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே விசாரணைகள் எக்காரணிகளுக்காகவும் தாமதப்படுத்தப்படவுமில்லை, மூடி மறைக்கப்படவுமில்லை.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் போது முப்படைகளின் தலைவராக மைத்திரிபால சிறிசேன பதவி வகித்தார். பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அவர் பொறுப்புக்கூற வேண்டும் என குறிப்பிட்டோம்.
ஆனால் விசாரணை அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டன. ஆகவே தாக்குதலுக்கு இவர் பொறுப்புகூற வேண்டும் என ஒவ்வொருவர் மனதில் உள்ளவர்களை தண்டிக்க முடியாது. யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பெயரில் ஒரு சிலர் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பை முழுமையாக பெற்றுக் கொள்ள ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.
மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் தகவல் உத்தியோகப்பூர்வமற்றதாகும், இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படும். கர்தினாலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்றார்.
No comments:
Post a Comment