(எம்.வை.எம்.சியாம்)
பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முறையாக நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்த போதிலும் குறித்த நிவாரணங்கள் உரிய மக்களை சென்றடையவில்லை. இருப்பினும், ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படுவதாகவும் அவை அனைத்தும் மக்களை ஏமாற்றும் போலி நாடகம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து கூறுகையில், கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்க்கு அமைவாக நாட்டின் உணவு பண வீக்கம் 95 வீதத்தால் அதிகரித்துள்ளது .சர்வதேச நாடுகளுடைய ஆய்வுகளின் பிரகாரம் ஆசிய கண்டத்தில் அதிக பண வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முதல் நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் எதுவித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. மேலும் சில மாதங்களுக்கு முன்னர் உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு இருந்தாலும் இலங்கையில் நேற்றுமுன்தினமே எரிபொருள் விலை குறைக்கப்பட்டு இருந்தது.
அரசாங்கம் ஒரு பக்கத்தில் விலை சூத்திரங்களை உருவாக்கி எரிபொருள் விலை உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கு அமைவாகவே நாட்டில் விலை நிர்ணயிக்கப்படும் என்று கூறியிருந்தாலும் அதனை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. மேலும் உலக சந்தையில் விலை குறைக்கப்பட்டு இருந்தாலும் நாட்டில் சொற்ப அளவிலேயே விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டது. அதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து உள்ள மக்களுக்கு நிவாரணங்களை பெற்று தருவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்காக வழங்கப்படும் நிவாரணங்களுக்கு மேலதிகமாக 2,500 ரூபா அதிகரிப்பதாக கூறினார். நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25,000 பெறுமதியான நிவாரணப் பொதிகள் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஏற்கனவே நிறுத்தப்பட்டது. மேலும் இவை இரண்டினையும் இணைத்து வழங்குவதாக கூறினார். அத்தனையும் மறந்து விட்டார். இருப்பினும் அவர்களுக்குரிய 2,500 ரூபாவினை கூட இன்னும் வழங்கவில்லை.
மேலும் நாட்டில் 61,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன. மேலும் அக்குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10,000 ரூபாவினை வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார். இன்னமும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
மேலும் சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவினை 7500 ரூபாவால் அதிகரிப்பதாகவும், மேலும் சமுர்த்தி பயனர் இல்லாத ஏனைய 725,000 குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 5,000 ரூபாவாக வழங்குவதாகவும் கூறினார், வயதானோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் சேமிகளுக்கு ஏற்ப 15 வீதம் வட்டியினை பெற்று தருவதாகவும் கூறினார். ஆனால் இதுவரையில் எதுவித வாக்குறுதிகளும் நடைமுறைப்படுத்தவில்லை என்றார்.
No comments:
Post a Comment