நான் மட்டும் மின்சார கட்டணத்தை செலுத்தாமலிருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை பொய்யானதாகும். அமைச்சர்களான ஹரீன் பெர்னான்டோ, கெஹெலிய ரம்புக்வெல மற்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உள்ளிட்டோரின் நிலுவை மின் கட்டணம் பல இலட்சமாக உயர்வடைந்துள்ளது என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மின் கட்டண நிலுவை விவாரத்தில் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது, ஆகவே மின்சார சபையின் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவுக்கு அழையுங்கள் எனவும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றில் வியாழக்கிழமை (06) சிறப்புரிமை பிரச்சினை தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எமது மாதாந்த மின் கட்டணம் 11 இலட்சமாக உள்ள நிலையில் அதனை செலுத்தாவிடின் மின் விநியோகத்தை துண்டிப்பதாக இலங்கை மின்சார சபை எனக்கு அறிவித்துள்ளதாக தேசிய பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியாகியுள்ளன.
11 இலட்சம் மின்சார கட்டணத்தை நான் செலுத்தாமல் இருப்பதாக வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொய்யான விடயத்தை குறிப்பிட்டு பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளார். நான் வகித்த மூன்று அமைச்சுக்களின் மின் நிலுவை கட்டணம் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டணம் தொடர்பில் உரிய அவதானம் செலுத்துமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளதுடன், இந்த மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு காலவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபையிடம் வலியுறுத்தியுள்ளேன்.
இந்த மின் கட்டண விவகாரத்தினால் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. நான் மாத்திரம்தான் மின் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை அடிப்படையற்றதாகும்.
அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ 14 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாவும், கெஹெலிய ரம்புக்வெல 7 இலட்சம் ரூபாவும், செஹான் சேமசிங்க 2 இலட்சத்து 24 ரூபாவும் மின் கட்டணம் செலுத்தவுள்ளதை அவர் குறிப்பிடவில்லை.
அரசாங்கத்தின் ஊழல் மோசடியை சுட்டிக்காட்டுவதால் என் மீது சேறுபூசப்படுகிறது. மின் கட்டணம் தொடர்பில் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்ட இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மற்றும் ஒரு சில ஊடகவியலாளர்களை ஓழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவுக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment