தலைவர் தெரிவில் நான் தோல்வியடையவில்லை, மாறாக ஊழல், மோசடிகள் வெற்றி பெற்றுள்ளன - எரான் விக்கிரமரத்ன - News View

About Us

About Us

Breaking

Friday, October 7, 2022

தலைவர் தெரிவில் நான் தோல்வியடையவில்லை, மாறாக ஊழல், மோசடிகள் வெற்றி பெற்றுள்ளன - எரான் விக்கிரமரத்ன

(எம்.மனோசித்ரா)

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவருக்கான தெரிவில் நான் தோல்வியடையவில்லை. மாறாக ஊழல், மோசடிகள் வெற்றி பெற்றுள்ளன. ஊழல் மோசடிகளால் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவருக்கான தெரிவில் நான் தோல்வியடையவில்லை. மாறாக ஊழல், மோசடிகள் வெற்றி பெற்றுள்ளன. நான் இதுவரையில் எந்தவொரு தேர்தலிலும் தோற்றதில்லை. இனி தோற்கப் போவதுமில்லை.

ஊழல், மோசடிகளில் ஈடுபடுபவர்களே அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் குழுக்களுக்கு நியமிக்கப்பட்டால் அவற்றை எவ்வாறு ஒழிக்க முடியும்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை பாரதூரமானதொரு விடயமாகும். மனித உரிமைகளுக்கு அப்பால் முதன் முறையாக இலங்கையில் இடம்பெற்றுள்ள பொருளாதார குற்றங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் காணப்பட்டோம். எனினும் அரசாங்கம் அதற்கு இடமளிக்கவில்லை.

நாம் ஒருபோதும் கொள்ளையர்களைப் பாதுகாப்பதற்காக செயற்படுவதில்லை. எமக்கு பதவிகள் முக்கியமல்ல. கொள்ளையர்களை இனங்காண்பதற்காக நாம் பொதுமக்களை ஒன்று திரட்டுவோம். அவர்களுடன் இணைந்து போராடுவோம். இந்த கொள்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிய முறைமை மாற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு கோப் மற்றும் கோபா உள்ளிட்ட குழுக்களின் தலைவர்களாக ஏதெனுமொரு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். அதனை விடுத்து அரசாங்கம் அதன் போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்குமாயின் நாடு முன்னேற்றமடையாது என்றார்.

No comments:

Post a Comment