ஜனாதிபதி, பிரதமரின் காரியாலயங்களுக்கு ஒரு சிலரை அழைத்து கலந்துரையாடி அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள முடியாது - லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Thursday, October 6, 2022

ஜனாதிபதி, பிரதமரின் காரியாலயங்களுக்கு ஒரு சிலரை அழைத்து கலந்துரையாடி அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள முடியாது - லக்ஷ்மன் கிரியெல்ல

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் காரியாலங்களுக்கு ஒரு சிலரை அழைத்து கலந்துரையாடி அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ள முடியாது. அதனால் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து கலந்துரையாடப்பட வேண்டும். அவ்வாறான நடவடிக்கை மேற்கொண்டால், அதற்கு எமது ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றம் வியாழக்கிழமை (06) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத்தாெடர்ந்து, அரசியலமைப்பு 22ஆம் திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தை சபையில் நேற்று நடத்துவதற்கு ஏற்பாடாகி இருந்த நிலையில் அரசாங்கம் அதனை இடைநிறுத்தியமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஒரு சில குழுக்களை பிரதமர் காரியாலயத்துக்கு அழைத்து அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ள முடியாது. 1972 அரசியலமைப்பு, குடியரசு அரசியலமைப்பு, ஜே.ஆர் ஜயவர்த்தனவின் 1978 அரசியலமைப்பு என அனைத்து அரசியலமைப்புகளும் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து, அங்கு கலந்துரையாடியே சட்ட வரைபு தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் நாங்கள் அனைவரும் அது தொடர்பில் கலந்துரையாடினோம். அவ்வாறுதான் இடம்பெற வேண்டும்.

ஆனால் இந்த அரசாங்கம் அரசியலமைப்பின் 20ஆம் திருத்தம் கொண்டுவந்தபோது பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவை சபாநாயகரான நீங்கள் இடைநிறுத்தினீர்கள். அந்த தவறை நீங்கள்தான் செய்தீர்கள். இதற்கு முன்னரும் நான் இந்த சபையில் அதனை தெரிவித்தேன். அதனால் எந்த கலந்துரையாடலும் இடம்பெறாமல் 20ஆம் திருத்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்கள்.

அத்துடன் அப்போதைய ஜனாதிபதியின் பொருளாதார மோசடிகளுக்காக முன்னின்ற சட்டத்தரணிகளே 20ஆம் திருத்தத்தை தயாரித்தார்கள். அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பில் யாருடனும் கலந்துரையாடாமல் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்தார்கள். அது தொடர்பில் அரசாங்கத்துக்கும் தெரியாது எமக்கும் தெரியாது. அதுதான் பிரதான பிரச்சினை.

அதனால் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் காரியாலயத்துக்கு குழுக்களை அழைத்து கலந்துரையாடி செய்ய முடியாது. அதற்காக தெரிவுக்குழு ஒன்றை நியமித்து, நாங்கள் கலந்துரையாடுவோம். அப்போது 22ஆம் திருத்தத்துக்கு எமது பூரண ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment