காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரழப்புடன் தொடர்புபட்டதாக உலக சுகாதார அமைப்பு சந்தேகம் வெளியிட்ட நான்கு இருமல் மருந்துகள் தொடர்பில் சர்வதேச எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிரப் மருந்துகள் கடுமையாக சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுவர்களிடையே 66 உயிரிழப்புகளுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் இந்திய நிறுவனம் ஒன்றான மெய்டென் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க தவறி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது பற்றி அந்த மருந்து உற்பத்தி நிறுவனம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
பாதிப்புக்குக் காரணம் என சந்தேகிக்கப்படும் Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகிய மருந்துகளை உலக சுகாதார அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.
இந்த நான்கு தயாரிப்புகளும் காம்பியாவில் ஆடையாளம் காணப்பட்டபோதும், “முறைசாரா சந்தை மூலம் ஏனைய நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கக் கூடும்” என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, இது பற்றி தனது இணையதளத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மருந்துகளை பயன்படுத்துவது, குறிப்பாக சிறுவர்களிடையே மோசமான உபாதை அல்லது உயிரிழப்புக்குக் காரணமாகலாம் என்று அது எச்சரித்துள்ளது.
கடந்த ஜூலை பிற்பகுதியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களிடையே சிறுநீரகக் காயங்கள் ஏற்படும் சம்பவம் அதிகரிப்பதை காம்பிய மருத்துவ நிர்வாகங்கள் அவதானித்ததை அடுத்தே உலக சுகாதார அமைப்பு இதில் தலையிட்டுள்ளது.
அது தொடக்கம் அனைத்து பரசிட்டமோல் சிரப் வகைகளுக்கும் காம்பிய அரசு தடை விதித்திருப்பதோடு மாத்திரைகளை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
இந்த மருந்து உற்பத்திகளை ஆய்வுகூடத்தில் சோதித்தபோது அதில் ஏற்க முடியாத அளவுக்கு டையெத்திலீன் கிளைக்காலோடு மற்றும் எத்திலீன் கிளைக்கால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தப் பதார்த்தங்கள் நச்சுத்தன்மை கொண்டவை என்பதோடு வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, மனக்குழப்பம் மற்றும் மரணத்திற்கு இட்டுச் செல்லும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் பல டஜன் சிறுவர்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டிருக்கும் காம்பிய சுகாதார அதிகாரிகள் அதன் குறிப்பிட்ட எண்ணிக்கையை கூறவில்லை.
இந்த உற்பத்தியாளர்கள் காம்பியாவுக்கு மாத்திரமே இந்த அசுத்தமான மருந்துகளை விநியோகித்திருக்கலாம் என்று இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டது.
எனினும் உற்பத்தியாளர் அதே அசுத்தமான பதார்த்தத்தை ஏனைய உற்பத்திகளிலும் பயன்படுத்தி இருக்கக் கூடும் என்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுக்கு அவைகளை ஏற்றுமதி செய்திருக்கக் கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment