(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் வகையில் அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை. அரச ஊழியர்களுக்கான சம்பளம் அரசாங்கத்தின் அன்றாட செலவாக கருதியே நிதி ஒதுக்கி வருகின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரச ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் ஒரு பகுதி சம்பளமே வழங்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது முற்றிலும் தவறானது.
தற்போது நாட்டில் வறுமானம் குறைந்த 60 இலட்சம் குடும்பங்களில் 30 இலட்சம் வரையிலான குடும்பங்கள் தங்களுக்கு நிவாரணங்களை எதிர்பார்த்திருக்கின்றன. அதேபோன்று நிலையான சம்பளமொன்றுக்குள் இருக்கும் அரச ஊழியர்களின் குடும்பங்களும் உணவு பண வீக்கம் அதிகரித்துள்ளமையால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலைமையில் குறித்த செய்திகளில் கூறுவதை போன்று அரசாங்கம் எந்தவித தீர்மானங்களையும் எடுக்கவில்லை.
அத்துடன் அரச ஊழியர்களின் சம்பளத்துக்காக மாதாந்தம் 93 பில்லியன் ரூபாவை ஒதுக்குகின்றோம். ஓய்வூதியத்திற்காக 26 பில்லியன் ரூபாவை ஒதுக்குகின்றோம். வருடத்துக்கு 1428 பில்லியன் ரூபாவை ஒதுக்கின்றோம்.
ஆனால் 2021 இல் நாட்டின் மொத்த வருமானம் 1460 மில்லியன் ரூபா. இதனை சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் எந்தக் கட்டத்திலும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை. அரச சேவையை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே அரசாங்கம் இருக்கின்றது.
அத்துடன் கடந்த வருடம் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1460 பில்லியனாக இருந்தபோதும் மொ்தத செலவு 3522 பில்லியனாகும். அதேபோன்று இந்த வருடத்தில் கடந்த 8 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1238 பில்லியன் ரூபா. மொத்த செலவு 3539 பில்லியன் ரூபாவாகும்.
இருந்தபோதும் நாங்கள் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசாங்கத்தின் அன்றாட செலவு பட்டியலிலே இணைத்து செயற்படுகின்றோம். அதனால் அரசாங்கம் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய பெரிய சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளது. அதனால் 1460 பில்லியன் வருமானத்தை 1800 பில்லியன் வரை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
இதன்படி முறையாக வருமானத்தை அதிகரிக்க வேண்டும். முடிந்தளவுக்கு குறைந்த வருமானமுடைய மக்களுக்கு சுமை இன்றி முகாமைத்துவம் செய்வதற்கே அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment