ஓடும் ரயிலில் துணிகரக் கொள்ளை : மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்யச் சென்ற தம்பதியினர் காயம் : ஒரு கொள்ளையர் சிக்கினார் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 6, 2022

ஓடும் ரயிலில் துணிகரக் கொள்ளை : மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்யச் சென்ற தம்பதியினர் காயம் : ஒரு கொள்ளையர் சிக்கினார்

(எம்.எப்.எம் பஸீர்)

வாள் உட்பட கூரிய ஆயுதங்களுடன் புகையிரத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள் ஓடும் ரயிலில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி, இரண்டு இலட்சம் ரூபா பணம் அடங்கிய பணப் பையை கொள்ளையிட்ட சம்பவம் அங்குலான பகுதியில் பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை (06) அதிகாலை கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளையர்கள் இருவரும் ஓடும் புகையிரதத்தில் இருந்து குதித்து தப்பியுள்ள போதும், அவர்களில் ஒருவரை காயங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதிகாலை 05.30 மணியளவில் அங்குலான புகையிரத நிலையத்தில் கொழும்பு மாத்தறை புகையிரதம் அண்மித்துள்ளது.

இதன்போது கொள்ளையர்கள் இருவரும் புகையிரதத்தில் ஏறியுள்ளனர். கொள்ளையர்கள் குறித்த ஒரு புகையிரத பெட்டியில் அமர்ந்திருந்த கணவன் மற்றும் மனைவியை அச்சுறுத்தி பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுள்ளனர்.

பின்னர் கணவனின் பணப் பையை பெறுவதற்கு கொள்ளையர்கள் முயன்றுள்ளனர். அதற்கு கணவன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது அவரை கொள்ளையர்கள் வாளால் வெட்டியுள்ளனர்.

இதன்போது மனைவியையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கணவனின் பணப்பையை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

பின்னர் புகையிரதத்தில் இருந்த ஏனைய பயணிகள் குறித்த இடத்திற்கு ஓடி வந்தபோது கொள்ளையர்கள் இருவரும் ஓடும் புகையிரதத்தில் இருந்து குதித்துள்ளனர்.

லுனாவை பகுதியில் வைத்து அவர்கள் இவ்வாறு குதித்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக 119 அவசர அழைப்பு இலக்கத்துக்கு தகவல் பரிமாற்றப்பட்டுள்ளது.

மொறட்டுவை பொலிஸார் கொள்ளையர்கள் குதித்த இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது புகையிரதத்தில் இருந்து குதித்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக கொள்ளையர்களில் ஒருவர் விழுந்து கிடந்துள்ளார்.

அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மற்றைய சந்தேக நபர் தங்கச் சங்கிலி, 2 இலட்சம் ரூபா உள்ளடங்கிய பண பையுடன் தப்பிச் சென்றுள்ளார்.

மொறட்டுவ பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக மன்னாரில் இருந்து மொறட்டுவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினரே இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த தம்பதியினர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த சந்தேக நபரான கொள்ளையருக்கு பொலிஸ் காவலில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் போதைப் பொருளுக்கு அடிமையான பல குற்றச் செயல்களுக்காக விளக்கமறியலில் இருந்து விடுதலை பெற்றவர் என தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் மேற்பார்வையில் சிறப்பு குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment