(எம்.எப்.எம்.பஸீர்)
மினுவாங்கொடை - கமன்கெதர பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்த சிலர் கமன் கெதர பகுதி வீடொன்றுக்குள் இருந்த மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதன்போது 51 வயதான தந்தை, 23 மற்றும் 24 வயதான அவரது இரண்டு மகன்களும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை மையப்படுத்தி, கலேவலயில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் பிரகாரம், இந்த முக்கொலையானது 2017 ஆம் ஆண்டு முதல் தொடரும் இரு குடும்பங்களுக்கு இடையிலான பறக்கவிடும் பட்டம் ஒன்றினை மையப்படுத்திய பிரச்சினையின் எதிரொலி என சந்தேகிக்கப்படுகின்றது.
அதன்படி இந்த பட்டம் விடும் பிரச்சினை காரணமாக இதுவரை 7 மனிதக் கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை (6) கொலை செய்யப்பட்ட தந்தை மற்றும் மகன்மார் இருவரும், இதே பட்டப் பிரச்சினையில் நடந்த கொலை சம்பவம் ஒன்றுக்காக விளக்கமறியலில் இருந்துவிட்டு அண்மையிலேயே பிணையில் விடுதலை பெற்றுள்ளனர். இவ்வாறான பின்னணியிலேயே அவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி இந்த தொடர் கொலைகளின் முதல் கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது.
2017 ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஏற்பட்ட பட்டம் பறக்கவிடுதல் தொடர்பிலான வாய்த்தர்க்கத்தின் எதிரொலியாக அந்த கொலைகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது தந்தை ஒருவரும் அவரது மகனும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அந்த சம்பவத்துக்காக பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மற்றொரு தந்தையையும் மகனையும் கைது செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் பின்னர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் அக்கொலையின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் இளைஞர் ஒருவர் கடந்த வருடம் ஜூன் மாதம் கொலை செய்யப்பட்ட நிலையில், அக்கொலை தொடர்பில் வியாழக்கிழமை (6) கொலை செய்யப்பட்ட தந்தை, மகன்மார் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையிலேயே அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த மூவரும் வீட்டிலிருந்த போது, வியாழக்கிழமை காலை வீட்டுக்கு வந்துள்ள சந்தேக நபர்கள், பொலிஸார் வந்துள்ளதாக கூறி கதவை திறக்குமாறு கூறியுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸாரின் சீருடையில் இருந்துள்ளார்.
கதவு திறக்கப்பட்டதும் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக இதுவரையான விசாரணைகளில் பொலிஸார் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
காலை 7.00 மணியளவில் பதிவான சம்பவத்தில் மகன்மார் இருவரும் ஸ்தலத்திலேயயே உயிரிழந்ததாகவும் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
துப்பாக்கிச் சூடு நடாத்தும் போது வீட்டில் ஏனையோரும் இருந்துள்ளனர். அவர்களுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
பின்னர் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கைகளில், சந்தேக நபர்கள் வருகை தந்ததாக கூறப்படும் கார், கம்பஹா - படல்கம பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சம்பவத்தின் மூன்று சந்தேக நபர்களை அதிரடிப் படையினர் பஸ் ஒன்றில் அனுராதபுரம் பகுதியை நோக்கி பயணிக்கும் போது கலேவலையில் வைத்து கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் நேரடி கட்டுப்படடில் மினுவாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment