(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஸ்தாபிக்கப்படவுள்ள கூட்டணியின் தலைமைத்துவத்திற்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் பெயரை பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தெரிவித்தார்.
10 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (31) மாலை இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடபில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூல வரைபில் ஒரு சில விடயங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.
இருப்பினும், அதற்கான தருணம் இதுவல்ல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமைக்கு மத்தியில் மக்கள் வாக்கெடுப்பினை நடத்துவது சாத்தியமற்றது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை முதலாவதாக செயற்படுத்தி, அதனை தொடர்ந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது குறித்து பிரத்தியேக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, பாராளுமன்றத்தின் அதிகாரங்களும், சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களும் பலப்படுத்தப்படும்.
பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் எதிர்வரும் காலங்களில் கூட்டணியாக ஒன்றிணைந்து தேர்தல்களில் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.
கூட்டணியின் தலைமைத்துவத்திற்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் பெயரை பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment